சென்னை தி நகரில் பிரபல நகைக் கடைக்கே அல்வா.. கோடிகளில் தங்க, வைர நகைகள் மாயம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல தங்க, வைர நகைக்கடையில் ரூ.1.84 கோடி தங்க, வைர நகைகள் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தள்ளது.இது பற்றி புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தியாகராய நகர் என்பது சென்னையின் மிகப்பெரிய வணிகப்பகுதி.. சென்னையின் ஒன்றரை கோடி மக்களும் அடிக்கடி வந்து செல்லும் இடம் என்றால் அது திநகர் எனப்படும் தியாகராய நகர் தான்.. திநகரில் நடப்பது போல் வணிகம் மொத்த தமிழ்நாட்டிலும் எங்குமே நடக்க வாய்ப்பு இல்லை.. பல கோடிகள் தினசரி புழங்கும் இடமாகும். சென்னை திநகரில் ஏராளமான ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும், பர்னிச்சர் கடைகளும், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சினிமா நிறுவனங்களும் அமைந்துள்ளன.

இங்குள்ள நகைக்கடைகள் பல உலகம் முழுவதும் மிகப்பெரிய வணிகம் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களாக உள்ளன. இந்நிலையில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல தங்க, வைர நகைகளின் மொத்த விற்பனை நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "எங்களுடைய நகைக்கடை நிறுவனம் சார்பில் தங்கம், வைர நகைகளை நகைகடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் கொல்கத்தாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து மொத்தமாக தங்க, வைர நகைகளை செய்து வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
இதற்காக அந்த கொல்கத்தா நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஆனால் கொல்கத்தா நிறுவனத்தின் மேலாளர் பிரீத்தம் என்பவர் எங்களுடன் நடத்திய வியாபாரத்தில் ரூ,1.84 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர், கொல்கத்தா நிறுவனத்தின் மேலாளர் பிரீத்தம் மற்றும் கடை ஊழியர்கள் பிரதீப் அருண், சதீஷ்குமார், கணேசன், முருகராஜ், தமிழ் மணி, வாசுதேவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் அனைவருமே கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ,1.84 கோடி தங்க, வைர நகைகள் மோசடி நடந்த தகவல் நகைக்கடைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications