விவசாய நிலத்தில் ஆபீசர்ஸ் அதிரடி.. இலவச மின்சாரம் பயன்பாடு கணக்கெடுப்பு தீவிரம்.. நொடிக்குநொடி ஸ்பீடு
சென்னை: விவசாய தேவைக்கு வழங்கப்பட்டிருக்கும், இலவச மின்சாரம் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை.. இது தொடர்பாக தோட்டக்கலை துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருக்கும் நிலையில், சில நடைமுறை சிக்கல்களும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நம்முடைய தமிழக அரசை பொறுத்தவரை, விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சோலார் மின் பாதைகள்: அதுமட்டுமல்ல, அடுத்த 3 வருடங்களில் பசுமை எரிசக்தி கழகம் வாயிலாக, 1,685 விவசாய மின் பாதைகளை, சோலார் மின் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு நடுவில், இலவச மின்சாரத்திற்கு வேளாண் துறை சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. எனினும், ஒருசிலர் இந்த இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாய நிலம்: அதாவது, விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்டதைவிட,அதிகமாக மின்சாரம் உபயோகப்படுத்துகிறார்கள்.. சிலர் இலவச விவசாய மின் இணைப்பு என பெற்று வர்த்தகம், தொழிற்சாலை போன்றவற்றிற்கும் சட்டவிரோதமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
அதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து பல நுாறு ஏக்கர் நிலங்களை வாங்கி, தமிழக அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை, இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிலங்களில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. விவசாயிகள் தவிர, மீன், இறால் பண்ணைகள், கிடங்குகள், சிறுதொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விதியை மீறி பயன்படுத்துவதாகவும் புகார் வந்தவண்ணம் இருந்தது.
மின் இணைப்புகள்: எனவேதான், தேவைக்காக மின் இணைப்பு பெற்றுக்கொண்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள இணைப்புகளையும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளையும் கணக்கெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு, வேளாண் துறை செயலர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இப்பணிகள் அனைத்தையும் மாவட்ட வாரியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, அதிகாரிகளும் களமிறக்கப்பட்டனர்.
இதையடுத்து, இலவச மின் இணைப்புகளின் உண்மைத் தன்மை அறியும் கள ஆய்வு பணியில் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள. உண்மையிலேயே விவசாய பணிகளுக்கு மின் இணைப்பு பயன்படுகிறதா அல்லது வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா என்றெல்லாம் தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதிரடி உத்தரவு: இந்நிலையில், இதுகுறித்த அறிக்கையை, கடந்த மாத இறுதிக்குள் தங்கள் தலைமை அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், வேளாண் பொறியியல் பிரிவு பொறியாளர்கள், இதற்காக விவசாய நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு, கணக்கெடுக்க வேண்டும் என்றும், கணக்கெடுப்பின்போது விவசாய நிலம் தொடர்பான தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கணக்கெடுப்பு பணி: இப்பணிகளுக்கு வருவாய் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதால், அவர்களும் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேளாண் துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார்.
இதுவரை கணக்கெடுப்பு குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் தரப்பில் கூறப்படும்நிலையில், வருவாய்த்துறையினரும் தற்போது கைகோர்த்துள்ளதால், கணக்கெடுப்பு பணிகள் விரைந்து நடந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications