கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கேஎஃப்சியில் ரூ.1000க்கு வாங்கிய சிக்கனில் காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கேஎஃப்சி எனும் துரித உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கனில் துர்நாற்றம் வீசியதால் கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வந்து பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கும் பணி, படிப்பு நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வருகிறார்கள்.

பொதுமக்கள் சாப்பிடுவதற்கு இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான உணவகங்கள் உள்ளன. அந்த வகையில் நான் வெஜ் பிரியர்களுக்கு பிடித்தமான கேஎஃப்சி உணவகமும் செயல்பட்டு வருகிறது. இதுபேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
இங்கு வறுத்த சிக்கன்கள் கிடைக்கும். அது போல் எலும்பில்லாத சிக்கன் பாப்கான் கிடைக்கும். அது போல் பர்கரும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கோபிநாத் என்பவர் ரூ 929 க்கு கிரிஸ்பி சிக்கன் வாங்கியுள்ளார். பின்னர் தனது குடும்பத்தினருடன் சாப்பிட உட்கார்ந்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அவர் அவரது குடும்பத்தினர் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தினார். பிறகு சிக்கனை துண்டு துண்டாக எலும்பில் இருந்து பிரித்து பார்த்த போது அதில் ரத்தம் உறைந்திருந்தது. மேலும் சிக்கனும் சரியாக வேகவில்லை.
இதையடுத்து அந்த சிக்கனை கவுன்ட்டர் அருகே கொண்டு சென்ற கோபிநாத், கடை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதம் செய்தார். அப்போது கடை ஊழியர்கள் காசு கொடுத்துவிடுவதாக சொன்னார்கள். ஆனால் கோபிநாத்தோ "உங்கள் காசோ வேறு சிக்கனோ எனக்கு தேவையில்லை. ரூ 1000 காசு போட்டு சிக்கன் வாங்கினால் இப்படித்தான் கொடுப்பீர்களா?
சிக்கன் வெந்திருந்தால்தானே எலும்பு வேகும். சிக்கனையே வேகாமல் எடுத்துவிட்டீர்கள்" என கடுமையாக வாக்குவாதம் செய்தார். ஊழியரோ, "ஏதோ ஒன்று இரண்டு அப்படியிருந்திருக்கும் சார். இனிமேல் தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிக்க போவதாக கூறியிருந்தார். அண்மைக்காலமாக உணவு பொருட்களில் கரப்பான்பூச்சி, பல்லி, எலி, வண்டு, புழு, பிளேடு, மனித விரல் என என்னென்னமோ கலப்படம் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன. பல நேரங்களில் உணவு பாதுகாப்பு துறை கடுமையாக செயல்பட்டு அபராதம் விதிப்பது, கடைக்கு தற்காலிக சீல் வைப்பது, கடைக்கு நிரந்தர சீல் வைப்பது என இருந்து வருகிறது. ஆனாலும் இது போன்ற அஜாக்கிரதைகள் இருந்து வருகின்றன.
கெட்டு போனாலும் அந்த உணவு பொருளை வேஸ்ட் செய்யக் கூடாது என குறுகிய எண்ணம் படைத்த சிலரால் அதை சாப்பிடும் வாடிக்கையாளர்கள் இறக்கும் சம்பவங்களும் நேரிடுகின்றன. இது தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு மேலும் கடுமையான தண்டனை வழங்கினால்தான் உணவகங்கள் பொறுப்புள்ளவைகளாக மாறும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications