8 சதவீதத்தில் இருந்து பாதிக்கு இறங்கிய சீமானின் ஓட்டு வங்கி.. சிக்கலே அங்கே தான்.. இப்ப டார்கெட் 202

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.. தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற ஓட்டுகள் பெருமளவில் கைமாறியதே சீமானின் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. இந்த இக்கட்டான சூழலிலும் சற்றும் தளராமல்.. வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு தனித்து போட்டி என்ற அதிரடி நம்பிக்கையுடன் சீமான் அடுத்த ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார்..

தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியல் என்ற ஒற்றை தாரக மந்திரத்தோடு தனித்து களம் கண்டு வந்த நாம் தமிழர் கட்சிக்கு, நடந்து முடிந்த தேர்தல் களம் மிகப்பெரிய ஒரு அரசியல் பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

Seeman

கடந்த 2010ல் தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி.. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 2016ம் ஆண்டு முதல் தேர்தல்களில் நேரடியாக போட்டியிட தொடங்கியது.. அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டு 1.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.. அப்போது ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும்.. சீமானின் மேடை பேச்சுகளும், தமிழ் தேசிய முழக்கங்களும் இளைஞர்களை ஈர்க்க தொடங்கியது உண்மை.

சீமானின் நாம் தமிழர் கட்சி

அடுத்து வந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி என தலா 20 தொகுதிகளை ஒதுக்கி புதிய அரசியல் புரட்சியை கையில் எடுத்தார் சீமான்.

இந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3.9 சதவீத வாக்குகள் கிடைத்தன.. முதன் முதலாக களம் கண்ட அமமுக 5.5 சதவீத வாக்குகளையும்.. மக்கள் நீதி மய்யம் 3.7 சதவீத வாக்குகளையும் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்த தொடங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..

இதற்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.61 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியது.. சுமார் 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அளவுக்கு வாக்குகளை அள்ளியதோடு, திமுக.. அதிமுக ஆகிய பாரம்பரிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்ற 3வது பெரிய கட்சியாக உருவெடுத்து சர்ப்ரைஸ் தந்திருந்தது.

8.1 சதவீத வாக்கு சதவீதம்

தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை தந்தது.. மொத்தம் 32 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று 8.1 சதவீத வாக்கு வீதத்துடன் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எட்டியது நாம் தமிழர் கட்சி..

ஆனால், மக்களே எஜமானர்கள் என்ற கோட்பாட்டுடன் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

தோல்வி ஒருபுறம் இருந்தாலும் இதுவரை ஒவ்வொரு தேர்தலிலும் ஏறுமுகமாக இருந்த வாக்கு சதவீதம் இந்த முறை பாதியாக குறைந்துபோய்விட்டது.. 2021-ல் 6.6 சதவீதம்.. 2024-ல் 8.2 சதவீதம் என இருந்த வாக்கு வங்கி.. இந்த தேர்தலில் வெறும் 4 சதவீதமாக (19,72,537 வாக்குகள்) சுருங்கிவிட்டது.

4 முனைப்போட்டியில் 4வது இடம்

234 தொகுதிகளிலுமே 4 முனை போட்டியில் 4வது இடத்துக்கு நாம் தமிழர் கட்சி தள்ளப்பட்டதோடு காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் 4வது இடத்தையே பெற்றுள்ளார்..

இந்த அதிர்ச்சியான வாக்கு சரிவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் வருகையே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2029 தேர்தல் டார்கெட்

இதுநாள் வரை சீமானின் உணர்ச்சிகரமான பேச்சுகளுக்கு ஆதரவாக இருந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் பலர் விஜய் மீதுள்ள நம்பிக்கையால் தவெகவை மாற்று சக்தியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். குறிப்பாக நகர்ப்புறங்களில் தவெக ஈர்த்த சுமார் 42 சதவீத வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பையும் வாக்கு வங்கியையும் அதிகமாகவே டேமேஜ் செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, சித்தாந்தத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட அரசியலை விட நட்சத்திர அந்தஸ்து மற்றும் ஆளுமை சார்ந்த ஈர்ப்பு இளைஞர்களை எளிதில் கவர்ந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.. தவெகவின் இந்த தாக்கத்தை முறியடிக்க தவறியது மற்றும் கூட்டணி வியூகங்கள் இல்லாதது குறித்து நாம் தமிழர் கட்சியினர் இப்போது தீவிர உட்கட்சி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்

இப்படியொரு நெருக்கடி சூழலிலும் சீமான் தனது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இன்று தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.. வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடும் என்றும், இந்த தேர்தலில் இழந்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை பெற்று மீண்டும் எழுச்சி பெறுவோம் என்றும் சீமான் இன்று உறுதியளித்துள்ளார்..

இறங்கிய ஓட்டு வங்கி

சீமான் தந்திருக்கும் இந்த உறுதியானது, நாம் தமிழர் தம்பிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்து வருகிறது.. காரணம், அரசியலில் எப்போதுமே தேக்கம் என்பது நிலையாக இருந்ததில்லை.

கொள்கை பிடிப்பு மற்றும் தனித்து போட்டி என்ற தனித்துவமான பாதை நாம் தமிழர் கட்சிக்கு ஒரு அடையாளத்தை தந்தது உண்மைதான் என்றாலும், மாறிவரும் டிஜிட்டல் அரசியல் சூழலில் வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள் மட்டுமே வாக்கு வங்கியை நிரந்தரமாக தக்க வைக்க உதவாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தி விட்டு போயுள்ளன.

புதிய அரசியல் சக்திகளின் வரவும், அவர்களின் சமூக ஊடக தாக்கமும் இளைஞர்களின் முன்னுரிமைகளை மாற்றியமைக்கும்போது, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கட்சியின் கள வியூகங்களை மாற்றியமைக்க வேண்டிய நெருக்கடி சீமானுக்கு இன்று ஏற்பட்டுள்ளது..

தனித்துவமான கட்சி

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவெக போன்ற புதிய சவால்களை முறியடிக்க வேண்டுமானால், நாம் தமிழர் கட்சி தனது உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.. வெறும் தேர்தல் கால பிரச்சாரமாக இல்லாமல் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளில் தொடர்ந்து களத்தில் நின்று போராடுவதன் மூலமே இழந்த வாக்கு சதவீதத்தை மீட்டெடுக்க முடியும்.

2029 தேர்தலுக்கான சீமானின் இந்த அதிரடி நம்பிக்கையும், பிடிவாதமான தனித்து போட்டி முடிவும் அக்கட்சியை மீண்டும் 3வது பெரிய சக்தியாக உயர்த்துமா அல்லது தற்போதைய 4வது இடத்திலேயே தேங்க வைக்குமா என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+