கமல், வில்சன், இன்பதுரை.. ராஜ்ய சபா தேர்தல் சூடு பிடிக்குது.. இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!
சென்னை: மாநிலங்களவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் களமிறங்குகின்றனர். அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் மாநிலங்களவை எம்பி (ராஜ்யசபா எம்பி) தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அதன்படி அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி நேற்று வெளியிட்டார்.

தேமுதிகவுக்கு அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் இடம் வழங்கப்படும். அவர்களுடன் கூட்டணி தொடருகிறது என்று அதிமுக அறிவித்துள்ளது.
வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக நான்கு மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.
திமுக வேட்பாளர்கள்
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர். 4வது வேட்பாளராக திமுக சார்பில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட தேர்வாகி உள்ளார்.
இதில் திமுக சார்பாக வாய்ப்பு பெற்றுள்ள எஸ். ஆர். சிவலிங்கம் (S. R. Sivalingam) தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். அவர் உத்தேச லிஸ்டில் கூட இல்லாமல் சர்ப்ரைஸ் தேர்வாக வந்துள்ளார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்வானவர். இடையில் 1991 தேர்தலில் இதே தொகுதியில் தோல்வி அடைந்தார். பின்னர் 2001 சட்டமன்ற தேர்தலில் இங்கே கடைசியாக போட்டியிட்டு மீண்டும் தோல்வி அடைந்தார். எம்பி தேர்தலில் 2011ல் இவர் சேலம் தெற்கில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து திமுகவில் நீண்ட காலமாக இருக்கும் உறுப்பினர் ஆவார். திமுகவிற்காக களத்தில் உழைக்க கூடியவர். ஆடம்பரம் இல்லாதவர்.
கமல்ஹாசன்
திமுகவுடனான தேர்தல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளார். இன்னொரு பக்கம் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸுக்கு திராவிடக் கட்சிகளின் ஆதரவு இல்லாததால், தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது சிக்கலாகி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்திய கமலுக்கு, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கி அவரை சம்மதிக்கவைத்துவிட்டது திமுக.
கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், ஒரு லோக்சபா சீட் தருகிறோம்; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமலிடம் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார். இதையடுத்து அவருக்கு ராஜ்ய சபா சீட் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தற்போது ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications