சென்னையை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் திட்டம்.. பல பூங்காக்களில் இதை பார்க்க போறீங்க!
சென்னை: பருவ மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி பூங்காக்களில் உறிஞ்சும் ஸ்பாஞ்ச் பார்க்குகள் ரூ.20 கோடியில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மழைநீரை உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகளை சரியான முறையில் அமைத்து பராமரித்தால் சென்னை அடுத்த லெவலுக்கு என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. சென்னை மாநகராட்சி முற்றிலும் நகர்புறம் என்பதால் இங்கு மக்கள் நடைபயிற்சி செய்யவும், உடல் நிலையை பாதுகாத்துக்கொள்ளவும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது இரண்டு பூங்காக்கள் கண்டிப்பாக இருக்கும். சில வார்டுகளில் அதற்கு மேலும் பூங்காக்களும் இருக்கும்.

ஒட்டுமொத்தமாக சென்னை மாநகராட்சியில் சுமார் 835 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பலவற்றை நேரடியாக மாநகராட்சியே பராமரிக்கிறது. சிலவற்றை ஒப்பந்ததாரர்கள் பராமரிக்கிறார்கள். சில பூங்காக்களை தத்தெடுக்கும் முறைகள் மூலமாகவும் பராமரிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள இந்த பூங்காக்களில் 'ஸ்பாஞ்ச் பார்க்’ எனப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டியுடன் கூடிய குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதல்முறையாக அமைக்கப்பட்டது. கொரட்டூர் பெரியார் நகர் பூங்கா, சூளைமேடு கில் நகர் பூங்கா, கொளத்தூர் வி.வி.நகர் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மே தினபூங்கா, வேப்பேரி மை லேடீஸ் பூங்கா, நந்தனம் டர்ன்ஸ் புல் பூங்கா, மணப்பாக்கம் பெல் நகர் பூங்கா, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பூங்கா என மொத்தம் 50 பூங்காக்களில் 'ஸ்பாஞ்ச் பார்க்’ அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பாஞ்ச் பார்க் எப்படி வேலை செய்யும் என்றால். ஸ்பான்ச் எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ அதேபோல இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் மழைநீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. கான்ங்ரீட் காடுகளாக உள்ள சென்னை மாநகரில் பெய்யும் மழை நீரை தேங்க விடாமல் சேகரித்து, சுத்திகரிக்கும் தன்மை கொண்ட ஸ்பாஞ்ச் பார்க்குகள், குட்டைபோன்ற அமைப்பையும், அகழியையும் கொண்டிருக்கின்றன. இதை தெளிவாக சொல்வது என்றால் சாலையை ஒட்டியுள்ள மழை நீர் வடிகால்கள் சாலையில் இருந்து நீரை எடுத்து சென்று, தண்ணீரை ஸ்பான்ச் பார்க் எனப்படும் குட்டைக்கு கொண்டு சேர்க்கும்.
பூங்காக்களில் பாதுகாப்பு வேலியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குட்டைகள் அருகே, மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பும் இடம்பெற்று இருக்கும். இதனால் குட்டை எப்போதுமே ஈரப்பதத்துடன் காட்சியளிக்கும். பூங்கா அமைந்திருக்கும் இடம், சாலைகள் அமைப்பு, மண்ணின் தன்மை போன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் அமைக்கப்படுகின்றன.
அப்படி ஆய்வு செய்து சென்னையில் முதல்கட்டமாக ரூ.7.67 கோடி மதிப்பீட்டில் 57 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 50 இடங்களில் இதுவரை இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இன்னும் ஏழு இடங்களில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் பருவமழை நெருங்கி வருவதால் , ஸ்பாஞ்ச் பார்க்குகளின் பயன்பாடு அதிகமாக தேவைப்படும்,. சிலபகுதிகளில் தண்ணீர் வெளியேறவே வழியில்லாத நிலை இருக்கிறது. அங்கெல்லாம் ஸ்பான்ச் பார்க்குகள் பெரிதாக கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை பூங்காக்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஸ்பாஞ்ச் பார்க்குகளை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
இதற்கிடையே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பாஞ்ச் பார்க்குகளை சரியான முறையில் பராமரித்தால் மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள். இதுகுறித்து மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications