பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து! வந்து இரண்டே வாரத்தில் வெளியேறியது ஏன்? என்னாச்சு?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து வெளியேறியுள்ளார். இதனால் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-ஆவது சீசன் தற்போது நடைபெறுகிறது. இந்த சீசனில் யார் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜிபி முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி தொடரின் நடிகை மீனாட்சி ரக்ஷிதா, விஜே மகேஸ்வரி, அமுதவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் போட்டியாளர்
இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளரே ஜி.பி.முத்துதான். அவரது வட்டார மொழியில் டிக்டாக், யூடியூப் ரசிகர்களை திட்டி திட்டியே பிரபலமான நிலையில் வட்டார மொழியில் திட்டக் கூடாது என போகும்போதே கமல்ஹாசன் அறிவுறுத்தி அனுப்பினார். மேலும் தனது குடும்பத்தினரை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருப்பதாகவும் கூறி கனத்த இதயத்துடன் குடும்பத்தினரிடம் இருந்து விடை பெற்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார்.

சக போட்டியாளர்
அங்கு அவருக்கும் சக போட்டியாளருமான தனலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் ஜிபி முத்துவின் அப்பாவித்தனத்தை சக போட்டியாளர்கள் வச்சு செய்வதாகவும் ரசிகர்கள் கொந்தளித்தனர். ஜிபி முத்து டைட்டில் வின்னர் ஆவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் பேச்சுவார்த்தை
அவர் வெளியேறுவதற்கு முன்னர் அவரிடம் பிக்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அது போல் இந்த நிகழ்ச்சியில் இருப்பதால் கிடைக்க போகும் பெயர், புகழ், பணம் குறித்தெல்லாம் முத்துவுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனாலும் இவற்றை முத்து ஏற்கவில்லை. தனக்கு பணத்தை விட மகன்தான் முக்கியம் என தெரிவித்துவிட்டு சென்றதாக கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 1 ஓவியா
அப்போது அனைத்து போட்டியாளர்களும் எழுந்து நின்று கைதட்டி, ஜிபி முத்துவை பாராட்டினர். பிக்பாஸ் சீசன் 1 இல் நடிகை ஓவியா வெளியேறிய போது ரசிகர்கள் எத்தனை வேதனை அடைந்தனரோ அந்த அளவுக்கு ஜிபி முத்துவுக்காக வேதனை அடைந்துள்ளனர். ஜிபி முத்துவின் மகன் விஷ்ணுவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிபி முத்துவின் மகன் விரைந்து குணமடைய ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

என்ன காரணம்?
வெற்றியாளராகவே கருதப்பட்ட ஜிபி முத்து வெறும் இரு வாரங்களில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் பணம், புகழ், பெயரை விட தனக்கு மகனே முக்கியம் என்றும் ஜிபி முத்து தெரிவித்துள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். கடந்த பிக்பாஸ் 5 ஆவது சீசனிலேயே ஜிபி முத்துவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் அவரால் போனை விட்டு இருக்க முடியாது என்பதால் அதை மறுத்ததாகவும் அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications