சென்னை வியாசர்பாடியில் வடிவேலு பாணி சம்பவம்.. போலீஸ் பெயரிலேயே 10 லட்சம் 'மொ(பொ)ய்' எழுதிய கும்பல்
சென்னை: வடிவேலுவிடம் போலீஸ் என கூறி பணத்தை ஒரு கும்பல் வழிபறி செய்துவிட்டு தப்பி ஓடும்.. அதுபோல் சென்னை வியாசர்பாடியில் போலீஸ் எனக்கூறி ஏமாற்றி இளைஞர்களிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்திருக்கிறது ஒரு கும்பல். இதை பற்றி பார்ப்போம்.
சுறா படத்தில் நடிகர் வடிவேலுவிடம் போலீஸ் என்று கூறி ஒரு கும்பல் கொள்ளையடிக்கும்.. நகைக்சுவைக்காக வைக்கப்பட்ட அந்த காட்சி உண்மையிலேயே நடந்துள்ளது. சென்னை வியாசர்பாடியில் போலீஸ் பெயரில் விபூதி அடித்துவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறது,

சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் ஓம்சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த 24 வயதாகும் மணிகண்டன், மருந்து விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார். இவர் கடந்த மாதம் தனது நண்பர் பிரவீன்குமார் என்பவருக்கு கடனாக ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், மணிகண்டன் தனது நண்பரான கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (வயது 21) என்பவரை நேற்று முன்தினம் அனுப்பி வைத்து கொடுத்த ரூ.10 லட்சத்தை பிரவீன் குமாரிடமிருந்து வாங்கி வரும் படி அனுப்பி இருக்கிறார். மணிகண்டனும் அவரது நண்பர் கோபிகிருஷ்ணா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பு பட்டாளம் சென்றுள்ளனர். அங்கு 10 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு, பேசின்பாலம் அருகில் உள்ள வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்தார்கள்.
அப்போது டிப்டாப் உடை அணிந்தபடி இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து போலீஸ் எனக்கூறி சோதனை செய்திருக்கிறார்கள். சோதனையில் 10 லட்சம் இருப்பதை பார்த்த அவர்கள், இந்த பணம் எப்படி வந்தது. உங்களிடம் உள்ள ரூ.10 லட்சத்துக்கு ஆவணங்கள் இருக்கிறதா? என்று மிரட்டும் தொணியில் சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளனர்.
மணிகண்டனும் கோபி கிருஷ்ணாவும் பயந்து போய் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சட்டென அந்த கும்பல் நீங்கள் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி, பணத்துடன் சென்று விட்டனர். அதன்பின்னர் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்தார்கள். போலீஸ் என்ற பெயரில் 10 லட்சம் ரூபாயை வழிபறி செய்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வியாசர்பாடி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications