சமையல் சிலிண்டர்.. ரூ.830 விலை ஏற்றியது எதுக்காக தரப்பட்ட தண்டனை? பாஜகவை நறுக்னு கேட்டது யார் பாருங்க
சென்னை: ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், 830 ரூபாயை படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை? என்பதை மத்திய அரசு சொல்ல வேண்டும் என்று மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
200 ரூபாய்: நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் முன்னதாக வெளிவந்தது... தற்போது, சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் அளிக்கப்பட்டு வரும்நிலையில், இந்த மானிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து சிலிண்டர் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது.

ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள்: பாஜக அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, விமர்சித்தும் வருகின்றன. அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:
"சமையல் எரிவாயுவின் விலையை ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 200 குறைக்கலாம் என ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியப் பெண்களுக்கு ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்திருக்கும் பரிசு இது என சொல்லப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி: மோடி 2014இல் பதவி ஏற்ற போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.410 ஆகும். ஆனால் இப்போது 1240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலத்தில், மூன்று சிலிண்டர் வாங்கியதற்கான பணத்தில், இப்பொழுது ஒரு சிலிண்டர் மட்டுமே வாங்க முடியும்.
ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், 830 ரூபாயை படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை என்பதை அரசு சொல்ல வேண்டும். மோடி பதவி ஏற்பதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 109.5 அமெரிக்க டாலராக இருந்தபோது, லிட்டருக்கு ரூபாய் 66 வீதம் பெட்ரோல் விற்கப்பட்டது.
கேள்வி: 84.23 அமெரிக்க டாலர் என்று கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்த பின்பும், பெட்ரோல் விலை 103 ரூபாயாகவே மோடி அரசு வைத்திருக்கிறது. இதுவும் யாருக்கு கொடுக்கப்பட்டு வரும் பரிசு என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கிய பின்பு, 2024 தேர்தலை நினைத்து பாஜக பதட்டத்தில் இருக்கிறது. இதனால் இத்தகைய பரிசுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அது தள்ளப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையையும், மோடி அரசு கச்சா எண்ணெய் விலை சரிந்த அளவுக்கு குறைத்தே தீர வேண்டும். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார் முத்தரசன்.












Click it and Unblock the Notifications