பாட்ஷா பாரு, பாட்ஷா பாருனு போஸ்டர் அடிக்கிறாங்க.. பாஜக அண்ணாமலையால வளரவில்லை.. காயத்ரி ரகுராம்
சென்னை: தமிழகத்தில் பாஜக பிரதமர் மோடியால் வளர்ந்து வருகிறதே தவிர அண்ணாமலையால் அல்ல என கட்சியிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்த காயத்ரி ரகுராம் கடந்த செப்டம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் வகித்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தன்னிடம் விசாரணையே கேட்காமல் நீக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். பின்னர் அண்ணாமலை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த நிலையில் விசாரணைக்கு அழைக்காததாலும் வார் ரூமிலிருந்து தன் மீது அவதூறு பரப்புவதாலும் தான் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்தார்.

காயத்ரி ரகுராம்
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்றைய தினம் கூறுகையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடமும் நான் புகார்களை கொடுத்துவிட்டேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னுடைய இந்த நிலைமைக்கு அண்ணாமலைதான் 100 சதவீதம் காரணம்.

நல்ல தலைவர்
ஒரு நல்ல தலைவராக இருந்தால் என்னை அழைத்து பேசியிருக்க வேண்டும். பிரதமர் மோடியை பார்த்துதான் நான் பாஜகவுக்கு வந்தேன். எனக்கு இப்படி மனஉளைச்சல் கொடுத்ததால் மனம் வலிக்கிறது. நான் பாஜகவுக்கு எதற்காக வந்தேனும் அந்த நோக்கமே இல்லாமல் போய்விட்டது. 8 ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டது.

பதவியை கேட்டு வாங்கியதில்லை
நான் பதவியை கேட்டு வாங்கியதில்லை. எனக்கு கொடுத்த பதவிகளில் எனது பயணத்தை தொடங்கினேன். நான் மோடிஜியை விஸ்வகுருவாக பார்த்துள்ளேன். எனது தந்தைக்கு பிறகு நான் தந்தையாக நினைத்த மனிதர் அவர். அமித்ஷாவை சந்தித்துதான் நான் கட்சியில் இணைந்தேன். உழைத்தேன். ஆனால் பலர் காயத்ரி கட்சிக்காக என்ன செய்தார் என கேட்கிறார்கள்.

கட்சியில் இருந்து
இவர்கள் கட்சியில் இருந்து என்ன செய்தார்கள் என்பதை சொல்லட்டும், நானும் சொல்கிறேன். தமிழகத்தில் பாஜக அண்ணாமலையால் வளரவில்லை. பிரதமர் மோடிஜியால் வளர்கிறது. பாட்ஷா பாரு பாட்ஷா பாரு, வந்தேன்டா பால்காரன் அப்படியெல்லாம் அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் மக்களிடையே என்ன ரீச் ஆகும் என்றால் பிரதமரின் நலத்திட்டங்கள்தான்.

11 மருத்துவக் கல்லூரிகள்
பிரதமரின் வீடு கட்டி கொடுக்கும் திட்டம், தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவைதான் மக்கள் மனதில் நிற்கும். இதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது அண்ணாமலை மட்டும் இல்லை. அந்தந்த மாவட்ட பாஜக தலைவர்கள்தான். எல்லாரையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவதில் அண்ணாமலை வல்லவர் என்பதை மறுக்க முடியாது என்றார் காயத்ரி ரகுராம்.












Click it and Unblock the Notifications