அடேங்கப்பா.. “திராவிட மண்”.. காயத்ரி ரகுராம் சொன்ன வார்த்தை.. ஆஹா! அடுத்து அங்கதானாமே?
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் மீது தொடர்ந்து குற்றசாட்டுகள் வைத்து வந்தாலும், நான் திராவிட மண்ணில் இருப்பதால் தான் பாதுகாப்புடன் இருக்கிறேன் என பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருக்கும்போது திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த காயத்ரி தற்போது திராவிட மண் எனப் பெருமைப்படுத்திப் பேசியிருப்பது கவனிக்கப்பட்டு வருகிறது.
பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்து ட்விட்டரில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.
பாஜகவில் இருந்து விலகிய நிலையில், காயத்ரி ரகுராம் வேறு கட்சியில் சேரப்போகிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவனைச் சந்தித்தும் பேசியிருந்தார் காயத்ரி ரகுராம். பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருவதால், திமுக அல்லது அதிமுகவில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

காயத்ரி பேட்டி: இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பின்னர் நடிகையும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அம்பேத்கர் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான தலைவர். அவருடைய பிறந்தநாளில் மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி. இத்தனை ஆண்டுகளாக சித்திரை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம், தை ஒன்று மட்டுமல்ல எல்லா நாளும் தமிழர்களுக்கு புத்தாண்டு தான்.
அண்ணாமலை வெளியிடும் திமுகவினரின் சொத்து பட்டியல் எல்லாமே மக்களுக்கு தெரிந்த ஒன்று தான், அதில் புதிதாக ஒன்றும் இல்லை. அவரிடம் புதிய தகவல்கள் இருந்திருந்தால் ஜனவரி மாதமே வெளியிட்டு இருப்பார். அவர் வெளியிடும் அறிக்கையால் ஒரு பயனும் இல்லை.

திராவிட மண் : அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றபோது கட்சிக்கு வளர்ச்சி என நினைத்தோம். ஆனால் வீழ்ச்சி தான். நான் வைத்த குற்றச்சாட்டுகள் மீது அண்ணாமலை தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலைமைக்கு என்ன அறிக்கை சென்றுள்ளது எனவும் தெரியவில்லை.
அண்ணாமலை மீது இவ்வளவு குற்றச்சாட்டுகள் கூறிய பின்னும் திராவிட மண்ணில் இருப்பதால் தான் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளித்துவருகின்றனர். திமுக, அதிமுக இரண்டுமே திராவிட கட்சிகள் தான். எந்த கட்சியில் இணைகிறேன் என்பதை விதிதான் முடிவு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
திமுக / அதிமுக : பாஜகவில் இருக்கும்போது திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த காயத்ரி ரகுராம், தற்போது திராவிட மண் எனப் பெருமைப்படுத்திப் பேசியிருக்கிறார். திமுக, அதிமுக இரண்டுமே திராவிட கட்சிகள் தான் என்றும் கூறியுள்ளார். இதனால், இந்த இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றில் காயத்ரி இணையக்கூடும் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன.












Click it and Unblock the Notifications