“ரம்மியிலும், தமிழக பாஜகவிலும் அதே ஜோக்கர்!” தொகுதி பங்கீடு குறித்து காயத்ரி ரகுராம் கடும் விமர்சனம்
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவிடம் குறிப்பிட்ட சில தொகுதிகளை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். மட்டுமல்லாது 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாக கொண்டாடப்படுகிறது.

இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இதே ஆட்சியில் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டாட முடியாது என பாஜகவுக்கு தெரியும் எனவே, தனது தாய் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவாவது பாஜக ஆட்சியில் இருப்பது கட்டாயமாகியுள்ளது.
எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 39+1 என 40 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 9 தொகுதிகளில் எப்படியாவது கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பாஜக கடுமையாக உழைத்து வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். மாவட்டம்தோறும் பாஜக மாநாடுகளையும், பேரணி பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
சமீபத்திய தகவலின்படி தமிழ்நாடு, புதுச்சேரி என சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளை பாஜக, அதிமுகவிடம் கேட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. பாஜக பெறும் 20 தொகுதிகளில் புதிய நீதிக்கட்சி, IJK, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி தரப்படும் என்றும் கடைசியாக பாஜன 13 தொகுதியில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து அக்கட்சியின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் நிர்வாகியுமான நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

அதாவது, "2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 13 இடங்களை பாஜக கோருகிறது என்று கேள்விப்பட்டேன். ரம்மியில் ஜோக்கர்கள் உட்பட 13 சீட்டுகள் மட்டுமே உள்ளன. பா.ஜ.க, உங்களிடம் அதிகமான ஜோக்கர்கள் இருப்பதால், உங்களால் வெல்ல முடியாது, தெற்கில் உங்களால் விளையாட முடியாது" என்று விமர்சித்து X சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications