ஜெம் வீரமணி வழக்கு.. திடீரென விரிவாக்கப்பட்ட எஸ்ஐடி.. களமிறங்கிய கூடுதல் அதிகாரிகள்
சென்னை: ஏழைச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட எஸ்ஐடி குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதல் அதிகாரிகள் சேர்க்கப்பட்டு விரிவாக்கம் தற்போது செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் பாலியல் வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கல்வி நிதியுதவி கேட்டு வந்த சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோக்கள் கொண்ட ஒரு பென் டிரைவுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வீடியோவில் வீரமணி
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மேற்கொண்டு இந்த வழக்கை முன்னெடுத்து செல்ல எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்பதால் கைவிடுவதாக போலீஸார் அறிக்கை சமர்ப்பித்தனர். அப்போது, இந்த வழக்கை கைவிட முடியாது என்றும் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த வழக்கை தற்போது கையில் எடுத்துள்ளது.
ரூ. 70 கோடி பணப் பரிவர்த்தனை
இதைத்தொடர்ந்து, வீடியோவில் இருந்தது ஜெம் வீரமணி என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீரமணி, உதவியாளர் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வீடியோக்களை மறைத்து வைத்திருந்ததாக வீரமணியின் உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.70 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காத்திருப்போர் பட்டியல்
இந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட காலகட்டத்தில் உரிய பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னாள் சென்னை ஆணையர் அருண், சென்னை தெற்கு காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன், கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ஐடி குழு
ஜெம் வீரமணி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி ஐபிஎஸ், சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை காவல் ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக ஊடகத் தொடர்பு அலுவலர் முத்தரசி ஐபிஎஸ், சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி ஆகிய 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட எஸ்ஐடி குழு அமைக்கப்பட்டிருந்தது.
கூடுதல் அதிகாரிகள்
இந்நிலையில், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதல் அதிகாரிகள் சேர்க்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுக் குழுவில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் முந்தைய விசாரணையில் சேகரித்த தகவல்கள், ஆவணங்களை இந்த எஸ்ஐடி குழுவினர் ஆய்வு செய்வர்.


Click it and Unblock the Notifications
