ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை! 16 வயது சிறுமி தற்கொலை! கமிஷனர் ஆபிஸில் தாய் புகார்!
சென்னை: ஜெம் வீரமணியின் பாலியல் வன்கொடுமையால் மனமுடைந்த 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் புகார் அளித்துள்ளார்.
ஜெம் வீரமணி நீண்டகாலமா சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த புகாரின் பேரில் அவர் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. "வீரமணியால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் என தைரியமாக புகார் கொடுக்கலாம். புகார் கொடுப்போரின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும்" என எஸ்ஐடி அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது ஏழ்மை சூழலை ஜெம் வீரமணி பயன்படுத்திக் கொண்டார்.
எனது 16 வயது மகளை படிக்க வைப்பதாக கூறி மகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுளளார். இதனால் மனமுடைந்த என் மகள், தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்போதே நான் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.
ஆனால் வீரமணி செல்வாக்கான நபர் என்பதால் என் புகார் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனது புகாரின் நிலை குறித்து காவல் நிலையத்தில் விசாரித்தேன். அப்போது, "எனது மகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாயமாகிவிட்டதாக கூறி வழக்கை முடித்துவிட்டதாக" போலீஸார் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கண்ணீருடன் திரும்பினேன். ஆனால் தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே எனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு காரணமான வீரமணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
