தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து பண்ணலாமா? எழுதி தந்த சொத்து பத்திரத்தை மீட்க பெயிரா சொல்லும் 2 வழி
சென்னை: 60 வயதில் தான செட்டில்மென்ட் எழுத வேண்டிய அவசியம் என்ன? தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா? என்பது குறித்த முக்கிய விளக்கத்தை பெயிரா தலைவர் வெளியிட்டிருக்கிறார்.. இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சமீபகாலமாகவே, சொத்து பிரச்சனை தொடர்பான புகார்கள் பெருகி வருகின்றன. பெரும்பாலும், இதில் பாதிக்கப்படுவது வயது முதிர்ந்த பெற்றோர்களாகவே உள்ளனர்.. குடும்ப சூழல்கள் காரணமாக சொத்துக்களை, தங்களது வாரிசுகளுக்கு செட்டில் மென்ட் பத்திரம் எழுதி தருகின்றனர். இந்த சொத்தை பெற்றுக் கொண்டு, வாரிசுகளும் ஒருகாலகட்டத்துக்கு பிறகு தாய்-தகப்பனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

கலெக்டரிடம் கண்ணீர் விடும் பெற்றோர்
இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம், அந்த பெற்றோர்கள் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த மாதம் வழக்கு ஒன்றில், சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தது.
அதில், "பிள்ளைகள் கவனிக்காவிட்டால் "பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்"படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரம் செல்லாது என்றும் அறிவிக்கலாம். இந்த சட்டம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது..
தான செட்டில்மென்ட்டை ரத்து செய்யலாமா
அதனால் கூட்டுக்குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்படும் மூத்த குடிமக்கள் விஷயத்தில் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதைவிட, அதில் தளர்வுகள் காட்டி சட்டத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதிகொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும்" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
சொத்துக்களை மொத்தமாக, தங்கள் பிள்ளைகளுக்கு எழுதி தந்துவிட்டு, நடுத்தெருவில் கதிகலங்கி நிற்கும் எத்தனையோ வயதான பெற்றோர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பானது, வயிற்றில் பாலை வார்த்துக் கொண்டிருக்கிறது.
தான செட்டில்மென்ட் ஆவணம்
இந்நிலையில், தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா? என்பது குறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, 2 வகையான தீர்வுகளை, பாதிக்கப்பட்டவர்களுக்காக கூறியிருக்கிறார். சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள பெயிரா தலைவர் சொன்னதாவது:
"குடும்ப சூழல் காரணமாக 60 வயதில் தான செட்டில்மென்ட் எழுத வேண்டிய அவசியம் வருகிறது.. நம்முடைய தினந்தோறும் தேவைகளையும், உடல் ஆரோக்கியத்தையும் பிள்ளைகள் கவனித்து கொள்வார்கள் என்ற அடிப்படையில்தான், தான செட்டில்மென்ட் எழுதி வைக்கப்படுகிறது..
தான செட்டில்மென்ட் எழுதி வைத்த உடனேயே, அதன் அனுபவமோ, ஆவணமோ அந்த தான செட்டில்மென்ட் எழுதி வாங்குபவர்களுக்கு வந்தாலும், மூத்த குடிமக்களை அவர்கள் கவனிக்காமல் இருந்தாலோ, அல்லது உணவு, உபசரிப்பு, பராமரிப்பு செய்யாமல் இருந்தாலோ, தான செட்டில்மென்ட் எழுதியவர் கோட்டாட்சியரிடம் புகார் தரலாம்..
கோட்ட நீதிபதி, மாவட்ட நீதிபதி
அந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எழுதி கொடுத்த தான செட்டில்மென்ட்டையே ரத்து செய்யக்கூடிய அதிகாரம், கோட்டாட்சியருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் இருக்கிறது.... மேலும், கோட்ட நீதிபதி, மாவட்ட நீதிபதி என்ற அந்தஸ்தில் இவர்கள் உள்ளதால், இந்த தான செட்டில்மென்ட்டை ரத்து செய்யக்கூடிய அதிகாரமும் இவர்களுக்கு உள்ளது.. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகாரை தரலாம்..
அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு, எழுதி கொடுக்கப்பட்டுள்ள தான ஆவணத்தை ரத்து செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். இந்த இரு வழிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் பலன்பெறலாம்" என்று பொதுமக்கள் நலன் கருதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications