கடலூரில் மேற்கூரை சரிந்து சிறுமி பலி.. குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி.. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: கடலூர் அருகே மருதத்தூர் கிராமத்தில் கட்டிட மேற்கூரை விழுந்ததில் சுதந்திர தேவி என்ற சிறுமி உயிரிழந்தாள். இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவில் அருகே உள்ள கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், ஸ்ரீமுஷ்ணம் அருகே காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரதேவி (வயது 15) என்ற சிறுமி சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலில் இன்று (செப்.10) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரதேவி (15) என்பவர் மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications