காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலி? கேரளா போல சென்னையில் சம்பவமா?
சென்னை: கேரளா போல் தமிழகத்திலும் காதலன் ஒருவர் ஜூஸ் குடித்த பின்னர் மயங்கி விழுந்து, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். கேரளாவைப் போல் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அதேநேரம் பயத்தில் அந்த வாலிபர் விஷம் கலந்து குடித்து இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 18 வயதாகும் சஞ்ஜீவ் குமார் என்பவர் ர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை பார் ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இவர் முன்பு ஒரு முறை தனது காதலியை கடத்தி சென்று பல்வேறு இடங்களில் சுற்றியதாக கூறப்படுகிறது. இதற்காக சஞ்ஜீவ் குமார் கைது செய்யப்பட்டு கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த பின்னர் சிறுமியுடன் மீண்டும் காதலில் ஈடுபட்டு வந்தாராம்.
காதலிக்கு கடந்த ஏப்ரல் 7ம் தேதி பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. இதற்காக பரமக்குடியில் இருந்து சஞ்ஜீவ் குமார் சென்னை வந்திருக்கிறார்.
பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்துபல இடங்களில் சுற்றினார்கள். பின்னர், இரவு 10 மணியளவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வீடு திரும்ப சஞ்ஜீவ் குமார் காத்திருந்து உள்ளார்.
அப்போது, குளிர்பானம் ஒன்றை சிறுமி காதலனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சஞ்ஜீவ் குமார் குடித்த பிறகு மயங்கி விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் சிறுமியின் பெற்றோர், தனது மகள் காதலனுடன் சென்றதை அறிந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து சஞ்ஜீவ் குமாரை தாக்கி மகளை அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட சஞ்ஜீவ் குமாரை அவரது உறவினர்கள் சொந்த ஊரான பரமக்குடிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்,ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த கோயம்பேடு போலீஸார் குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக கோயம்பேடு போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக விசாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் இளம் பெண் ஒருவர் தனது காதலனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்திருந்தார். அதே பாணியில் இது நடந்ததா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்
இந்த விவகாரத்தில் சிறுமியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்து கைது செய்ய வைத்துவிடக்கூடாது என்ற பயத்தில் குமார் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயங்கியதாகவும் அதனால் இறந்துபோனதாகவும் ஒரு பக்கம் கூறுகிறார்கள். ஆனால் என்ன நடந்தது என்பதை போலீசார் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தால் தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications