ராஜ் பவன் எதற்கு? ஆளுநர் ரவிக்கு பசுமை வழிச் சாலையில் வீடு கொடுங்க.. காங்கிரஸ் எழுப்பும் கோரிக்கை!
சென்னை: ஆர்.என்.ரவி ஏன் ஆளுநர் மாளிகையில் தங்க வேண்டும்? அவருக்கு பசுமை வழிச் சாலையில் இடம் கொடுங்கள் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை.
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லக்குமார், விஜய் வசந்த், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள், ஆங்கிலேயர்கள் தான் ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தனர். ஆர்.என்.ரவி ஏன் ஆளுநர் மாளிகையில் தங்க வேண்டும்? அவருக்கு பசுமை வழிச் சாலையில் இடம் கொடுங்கள். ஆளுநருக்கு முதலில் வரலாறு தெரியாது, ரவிக்கு ஒரு மார்க் கூட போட முடியாது. அவர் படித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. எந்த ஒரு தகுதியும் இல்லாதவர் ஆளுநர்.
ஒரு வட்ட செயலாளராக கூட இருக்க தகுதி இல்லாதவர் ஆளுநர் ரவி. அவருக்கு ராஜ் பவன் எதற்கு? வரலாற்று திரிபுகளை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு ஆளுநர் ரவி ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் வெகுஜன போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "ஆளுநர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் போலீஸ் அதை விசாரிக்குமா? மகாத்மா காந்திக்கு ஆள் இல்லை என்று நினைக்கிறீர்களா, ஜாதி பலம் இல்லை என்று நினைக்கிறீர்களா, ஜாதி தலைவர்களை பார்த்து தான் தமிழ்நாடு போலீஸ் பயப்படும். மற்றவர்களுக்கு பயப்படாதா, ஆளுநர ரவி தமிழகம் வரும் போதே நான் சொன்னேன், அவர் கல்வியாளர் கிடையாது, உளவு பார்ப்பவர்." என ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications