தமிழ்நாட்டின் மிஸ்டர் பிரம்மாண்டம்; டைடல் பார்க் டூ மெட்ரோ வரை: கருணாநிதி செய்த மாற்றங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகப் பதவி வகித்த மு.கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிகப்பிரம்மாண்டமான திட்டங்கள் என்ன? அதன் மூலம் அவர் எப்படிச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டில் வேறு எந்த முதல்வர்களும் செய்யாத சில பிரம்மாண்ட திட்டங்களைச் செயல்படுத்தியவர் மு.கருணாநிதி. ஆனால், அவரை எதிர்ப்பவர்கள் அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்பார்கள்? அவரிடம் முதல் பிரம்மாண்டமான சாதனை எது என்று சொன்னால் அச்சு அசல் திருவாரூர் தேர்போல சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைத்தது.

இந்தக் கல் தேர் 128 அடி உயரம் கொண்டது. 1973இல் இதற்காக அடிக்கல்லை நாட்டினார் மு.கருணாநிதி. இதைக் கருணாநிதியின் கனவுக்கு ஏற்ப கட்டி முடித்தவர் கட்டிடக் கலை நிபுணர் கணபதி ஸ்பதி. இங்கே உள்ள ஆடிட்டோரியத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளைக் கடந்து காட்சி தருகிறது இந்தக் கற்கூடம். ஆனால் இது கட்டி முடிக்கப்படும் போது கல்வெட்டில் அவர் பெயர் பொறிக்கப்படாமல் வரலாறு வழுக்கிவிட்டது. 1976இல் அவசரநிலையை அமல்படுத்தி திமுக ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. ஆகவே இந்த வள்ளுவர் கோட்டத்தைக் குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது திறந்து வைத்தார். அந்த விழாவுக்குக் கருணாநிதிக்கு அழைப்பு கூட அனுப்பப்படவில்லை.
அதைச் சுட்டிக்காட்டி கருணாநிதி வீட்டில் அமர்ந்தபடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "திறப்பு விழாவுக்குத் தேதி கொடுத்து, இன்னும் 7 நாட்களில் விழா நடைபெற இருக்கும் நேரத்தில் என் தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த விழாவில் நம்முடைய நிழல்கூட படக்கூடாது என்று எண்ணுகின்ற மிகச்சிறந்த நண்பர்கள் சிலர் என்னைத் தாக்கிப் பேசினார்கள். ஒருவேளை அதைக் கட்டியதற்காகத் தாக்கிப் பேசி இருக்கக் கூடும். சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கின்ற இடம் எனது சலுகையால் பெறக்கூடியது அல்ல" என்று உணர்ச்சிப்பூர்வமாக எழுதினார்.

தனது ஆட்சியில் முதல் பிரம்மாண்ட விழாவைத் தவறவிட்ட கருணாநிதி, அதே வள்ளுவருக்கு 1990இல் கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி சிலையை நிறுவுவதற்காக அறிவிப்பை வெளியிட்டார். அது 2000இல் திறந்து வைக்கப்பட்டது. அதே கணபதி ஸ்தபதிதான் இச்சிலையையும் வடிவமைத்தார். அப்போது பலரும் கடல் நடுவே சிலை வைப்பது ஆபத்து என விமர்சித்தனர். இவ்வளவு உயரத்திற்குச் சிலை தேவையா என்றனர். ஆனால், 2004இல் சுனாமி வந்தபோதும் சிலை வடிவில் தாக்குப் பிடித்து நின்றார் வள்ளுவர்.
தமிழ் அடையாளங்களைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்து இதைச் செய்த கருணாநிதி, தமிழ்நாடு மக்கள் வியக்கும்படி இன்னொரு பிரம்மாண்ட சாதனையைச் செய்தார். சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தை உருவாக்கித் தந்தார். எப்படி வள்ளுவர் கோட்டத்தைக் கருணாநிதியால் திறந்து வைக்க முடியாமல் போனதோ அதேபோல் இந்தப் பேருந்து நிலையத்தையும் அவரால் திறந்துவைக்க முடியாமல் போனது. இவரை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதேபோல மற்றொரு பிரம்மாண்ட திட்டம்தான் மக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை வழங்கியது. சுமார் 3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்தார். அது இந்தியா முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது. இது எப்படி சாத்தியம் எனப் பலரும் கேட்டனர். ஆனால், ஆட்சி முடிவதற்குள், ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. கூடவே 661 கோடி ரூபாய்ச் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கினார்.

இவரது ஆட்சியில் வேளாண்துறையில் செயல்படுத்தப்பட்ட பிரம்மாண்ட திட்டம் ஒன்று உள்ளது. 1 இலட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுத்தார். கருணாநிதியின் பிரம்மாண்ட திட்டத்திற்கு இன்னொரு சான்று 'அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்'. சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இதைக் கட்டி முடித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் 179 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் இதை அமைத்தார். அதை அதிமுக ஆட்சியில் முடக்கினர் ஜெயலலிதா. நீதிமன்றம் போய் அதற்காக உரிமையைப் பெற்றுத் தந்தது திமுக.
இன்றைக்கு கத்திபாராவில் உள்ள பிரம்மாண்ட மேம்பாலம் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டதுதான். டைடல் பார்க்கை கொண்டு வந்து தொழில்நுட்ப உலகில் புரட்சியை செய்ததும் இவர்தான். பிரிட்டிஷ் ஆட்சி முதல் தமிழ்நாட்டுக்கு என்று தனியாக ஒரு தலைமைச் செயலகக் கட்டியம் இல்லை. ஆகவே, செயின் ஜார்ஜ் கோட்டையில் வாடகையிலிருந்த தலைமைச் செயலகத்தை மாற்ற முடிவு செய்தார். அதன்படி ஓமந்தூரார் அரசு தோட்டத்திற்கு ரூ 87,910 கோடி செலவில் புதிய சட்டமன்றம் மற்றும் செயலக வளாகத்தைக் கட்டி திறந்து வைத்தார். ஆனால், அதையும் ஜெயலலிதா மருத்துவமனை ஆக்கினார். தொடர்ந்து செயல்படாமல் முடக்கினார்.
கருணாநிதி ஆட்சியில் மாபெரும் உச்ச சாதனை என்றும் பிரம்மாண்ட திட்டம் என்று சென்னை மெட்ரோவை சொல்ல முடியும். ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'சென்னை மெட்ரோ ரயில் திட்ட'த்தைக் கொண்டுவந்தார். அப்போது அதை ஜெயலலிதா விமர்சித்தார். மெட்ரோக்குப் பதில் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்றார். கருணாநிதி எப்படி வள்ளுவர் கோட்டத்தைத் திறக்க முடியாமல் தடுக்கப்பட்டரோ அதே கதை மெட்ரோ வரை தொடர்ந்தது. மெட்ரோ கட்டி முடிக்கப்பட்ட போது கருணாநிதி பதவியில் இல்லை. ஜெயலலிதாதான் அதைத் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications