Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜ் அப்பீல் மனு..தீர்ப்பு எப்போது? தள்ளி வைத்த ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவன் கோகுல்ராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் 23ம் தேதி காதலியுடன் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்றபோது அவரை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. கோகுல்ராஜ் உடல் தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

 GokulRaj murder: Madras High Court adjourned verdict on Yuvrajs appeal petition

இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; தங்களுக்கு எதிராக திரட்டப்பட்டதாக கூறப்படும் ஆதாரங்களை காவல்துறை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், கோகுல்ராஜின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் பயன்பாட்டில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களையும், அர்த்தநாரீஸ்வரர் கோயில் வீடியோ பதிவான ஹார்ட் டிஸ்க்கையும், நடைமுறைகளை பின்பற்றாமல் காவல்துறை கையாண்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஹார்ட் டிஸ்க்கில் இருந்த பதிவுகளை யார் கையாள்வது, யார் எடுக்க சொன்னது, யார் எடிட் செய்வது, யார் அழித்தது என்பது தொடர்பான எந்த விவரங்களையும் காவல்துறை முழுமையாக விசாரிக்கவில்லை என்றும், சிசிடிவி கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். வீடியோ காட்சிகளை வைத்து நீதிபதிகள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாகக் கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது. அதுசம்பந்தப்பட்ட விசாரணை, சுவாதி தாய்மையடைந்த நிலையில் இருப்பதால், அவர் கணவரிடம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாயார், அரசு தரப்பு, சி.பி.சி.ஐ.டி தரப்பு வாதங்கள் நிறைவடைந்தபடியால், இந்த வழக்கில் சிறையிலிருக்கும் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடு செய்தவர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். அதேபோல், கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகளில் பதிவான நாமக்கல் மாவட்டத்திலிருக்கும் திருச்செங்கோட்டில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

நீதிபதிகள் அறிவித்தபடி, கடந்த மாதம் 22ஆம் தேதி முற்பகல் 11:40 மணிக்கு கோகுல்ராஜ் மரணம் குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்தனர். கோயிலின் மேற்குப்புற வாசலில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொடிமரத்தின் அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களைப் பார்வையிட்டனர். அதன் வழியாக, கோகுல்ராஜ் சுவாதியும் உள்ளே வரும் காட்சியும், யுவராஜ், அவரின் கும்பலுடன் வெளியே வரும் காட்சியும் பதிவாகியிருக்கிற நிலையில், மீண்டும் கோயிலுக்குள் வந்த யுவராஜ், அவரின் ஆட்கள் எந்த வழியாக வெளியேறினார்கள், வெளியேறுவதற்கான வாய்ப்புகள் என்ற அளவிலும் இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு புற வாயில்களிலும் உள்ள கேமராக்கள், கேமரா இல்லாத பகுதிகள் எவை என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் சரக டி.ஐ.ஜி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீதிபதிகள் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வை முடித்தபிறகு, கோகுல்ராஜ் உடல் கிடந்த ரயில்வே டிராக் உள்ள கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதிக்குச் சென்று, அங்கும் ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து பேசிய கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா மோகன்,நீதிபதிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். சுவாதி மாறியதால், தீர்ப்பு மாறாது. கீழமை நீதிமன்றத்திலேயே அவர் கொடுத்திருக்கிற வாக்குமூலமும், சாட்சியங்களும் இருக்கின்றன. இது தற்கொலை அல்ல. இது ஒரு கொலை. கொடூரமான கொலை, திட்டமிட்ட கொலை எனக் கூறப்பட்டிருக்கிறது. சி.சி.டி.வி காட்சிகள், பாரன்சிக் டிபார்ட்மென்ட்க்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது முக்கியமான சாட்சி. மூன்றாவதாக, தனியார் தொலைக்காட்சியில் வலியப்போய் யுவராஜ் கொடுத்த பேட்டி. இவைதான் இந்த குற்றத்தைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே, தீர்ப்பு மாறும் வாய்ப்பில்லை என்று கூறினார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+