கண் அசந்த நேரத்தில் மிஸ் ஆன 30 பவுன் நகை.. நெல்லை ரயிலில் சென்னை வந்த பெண் பயணிக்கு நடந்த அதிர்ச்சி!
சென்னை: கோவில் திருவிழாவுக்காக தூத்துக்குடி சென்றுவிட்டு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தாம்பரம் வந்தடைந்த பயணியின் ஹேண்ட்பேக்கில் துளை போட்டு 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சோழிங்கநல்லூரை சேர்ந்த லட்சுமி என்ற அந்த பயணி தாம்பரம் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில், ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சோழிங்கநல்லூர் நியூ குமரன் தெருவை சேர்ந்தவர் தளவாய். இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கோவில் திருவிழாவுக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளைக்கு இந்த தம்பதியினர் சென்றிருந்தனர்.

கோவில் திருவிழாவை பார்த்து கொண்டாடி விட்டு நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு உள்ளனர். திசையன்விளையில் இருந்து மினி பஸ்சில் நெல்லை ஜங்சன் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்துள்ளனர். அன்ரிசர்வ்டு பெட்டியில் பெரிய அளவில் பயணிகள் கூட்டம் இல்லை. இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக லட்சமி தான் அணிந்திருந்த தங்க நகைகளை எல்லாம் கழற்றி ஹேண்ட்பேக்கில் வைத்து பூட்டு போட்டு பூட்டி வைத்து கொண்டார். சுமார் 30 சவரன் தங்க நகைகள் வைத்துள்ளார்.
பின்னர் ரயிலில் சிறிது நேரம் தூங்கியிருக்கிறார். பின்னர் காலையில் தாம்பரம் ரயில் நிலையம் வந்தவுடன் ஹேண்ட்பேக் மற்றும் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சென்று இறங்கிய பிறகு ஹேண்ட்பேக்கில் கையை விட்டு பார்த்த போது நகைகள் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். இங்கே தானே வைத்தோம் எங்கு போனது என ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாயினார். அப்போது ஹேண்ட்பேக்கில் அடியில் யாரோ பிளேடால் கிழித்து இருந்தது தெரியவந்தது.
இதனால் மர்ம நபர்கள் யாரோ கைப்பையை பிளேடால் வெட்டிவிட்டு அதில் இருந்து நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக தாம்பரம் ரயில் நிலைய போலீசாரிடம் சென்று நடந்ததை கூறினார். அப்போது அவர்கள் எங்கே வைத்து நகை திருடுபோயிருக்கும் என்பது தெரியாததால், உங்கள் ஏரியா பகுதியில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். பின்னர் அங்கு சென்று புகார் கூறியபோதும், அவர்களும் ஏதோ சொல்லி தாம்பரம் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதன்பேரில் மீண்டும் தாம்பரம் ரயில் நிலைய போலீசாரிடம் எடுத்துக் கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவர்களிடம் தகவல்களை கேட்டறிந்து பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்குவதாக கூறியுள்ளனர். போலீசாரிடம் லட்சுமி கூறுகையில், நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியில் பெண் ஒருவர் இருந்ததாகவும், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி சென்றதாகவும் கூறினார்.
போலீசார் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூட்டு போட்டு வைத்திருந்த ஹேண்ட்பேக்கில் பிளேடால் ஓட்டை போட்டு 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications