விழுப்புரத்தில் காவலர் மனைவி கங்காதேவிக்கு ஷாக்.. அதிகாலையில் ஆடிப்போக வைத்த டவுசர் கொள்ளையர்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தோப்பு காலனி பகுதியில் வசித்து வரும் காவலர் ராஜசேகர் என்பவர் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது மனைவியிடம் 4.5 பவுன் தங்க நகையை முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தோப்பு காலனி பகுதியில் 32 வயதாகும் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி ராஜசேகர் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் முகமூடி அணிந்தபடி டவுசர் மட்டுமே அணிந்திருந்த கொள்ளையர்கள் 3 பேர் வந்துள்ளனர். போலீஸ் ஏட்டு ராஜசேகர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திடீரென உள்ளே புகுந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் 3 பேரும் அங்கிருந்த ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் மனைவி கங்காதேவியின் (30) கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் நகையை பறிக்க முயன்றார்கள்.
உடனே தூக்கத்தில் இருந்து எழுந்த கங்காதேவி, தனது நகையை கையால் இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.இந்த சத்தம் கேட்டதும் பக்கத்து அறையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகர் உடனடியாக எழுந்து மின்விளக்குகளை போட்டிருக்கிறார். அதற்குள் அந்த கொள்ளையர்களில் ஒருவன் ராஜசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும், மற்றொருவன் ராஜசேகரின் குழந்தையை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறான்.
உடனே மற்றொரு கொள்ளையன், கங்காதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் நகையை பறித்தான். பின்னர் அந்த கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து வீட்டின் பின்புற தோட்டம் வழியாக தப்பி ஓடினார்கள் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் ராஜசேகர் பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பறிபோன நகையின் மதிப்பு ₹4 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications