10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி
சென்னை: நடுத்தர குடும்பங்களில் ஒரு விசேஷம் வரப்போகிறது என்றாலே பீரோவில் இருக்கும் பழைய நகைகளை மாற்றி, புதிய டிசைனில் நகை வாங்கிவிடுவது காலம் காலமாக நடக்கும் ஒரு வழக்கமாகும்.. ஆனால், பல சமயங்களில் பழைய நகையை மாற்றும் போது நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.. இந்த நஷ்டத்தைத் தவிர்க்க சில சீக்ரெட் விஷயங்களை கடைப்படிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.. பணத்தையும் தங்கத்தையும் மிச்சப்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
உதாரணத்துக்கு 10 சவரன் பழைய நகையை மாற்றிவிட்டு, புதிய நகை எடுக்கும்போது, கையில் 8 சவரன் தான் வந்து சேரும்.. "என்னப்பா இது.. 2 சவரன் காணோமே" என்று கேட்டால், அழுக்கு, கல் எடை, சேதாரம் எனப் பல கணக்குகளை சொல்லி நம்மை அப்படியே சமாதானப்படுத்தி விடுவார்கள்.

தங்க நகை மாற்றம்
இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.. பெரும்பாலும் பழைய நகை என்றாலே கல் வைக்கப்பட்டிருக்கும்.. இப்படி பழைய நகைகளில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தால், அதன் எடையைத் தனியாகக் கழிக்கச் சொல்ல வேண்டும்.
பல கடைகளில் மொத்த எடையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை உதாரணமாக 10% கல் எடை என்று கழிப்பார்கள்.. ஆனால் நிஜமாகவே கல் எடை அதைவிடக் குறைவாக கூட இருக்கலாம். அதனால் நகையை மாற்றும் முன் வீட்டில் ஒருமுறை எடையை பார்த்துவிட்டு செல்வது நல்லது.
பழைய நகைகள்
அதேபோலவே நகையில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யாமல் எடையைப் பார்த்தால், அதன் எடையில் சிறிது வித்தியாசம் வரும்.. சில கடைகளில் நகையைச் சுத்தப்படுத்திவிட்டு எடையைப் பார்ப்பார்கள்.. அப்போது தங்கம் சிறிதளவு கரைய வாய்ப்பு உண்டு என்பதால் கவனமாக இருக்க வேண்டும்..
அடுத்ததாக உருக்கி பார்த்து டெஸ்ட் செய்வார்கள்.. சில கடைகளில் உங்கள் நகை 22 காரட் தானா என்பதை உறுதி செய்ய உருக்கிப் பார்ப்போம் என்பார்கள்.. அப்படி உருக்கும்போது 1 முதல் 2 சதவீதம் வரை தங்கம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்வார்கள். இதற்கு பதிலாக தற்கால நவீன கருவிகளான காரட் மீட்டர் மூலம் உருக்காமலேயே தங்கத்தின் தரத்தை சரிபார்க்க சொல்ல வேண்டும்.
செய்கூலி, சேதாரம்
அதேபோல பழைய நகையை தந்து, புது நகை எடுக்கும்போது, அந்தக் கடையில் உங்கள் பழைய நகைக்கு அன்றைய மார்க்கெட் விலையை முழுமையாக கொடுக்கிறார்களா அல்லது 90% தான் தருவார்களா என்பதை முன்பே கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்..
நிறைய பேர் செய்யும் தவறு என்ன தெரியுமா, பழைய நகையை வாங்கிய அதே கடையில் மாற்றாமல் வேறு கடையில் மாற்றுவதுதான்.. நீங்கள் வாங்கிய கடையில் அதன் தரம் அவர்களுக்குத் தெரியும் என்பதால், பெரும்பாலும் முழு விலையை கொடுக்க முன்வருவார்கள்.. ஆனால், வேறு கடைக்கு போனால், தரம் குறைவு என்று சொல்லி விலையை குறைக்க பார்ப்பார்கள்..
தங்கம் வாங்கும்போது கவனம்
எல்லாவற்றையும் விட முக்கியமானது, நகை விஷயத்தில் பேரம் பேச தயங்கவே கூடாது.. புதிய நகை எடுக்கும்போது அவர்கள் போடும் 12% முதல் 18% வரையிலான சேதாரத்தைக் குறைக்கச் சொல்லுங்கள்.. பழைய நகை மாற்றும் போது ஏற்படும் நஷ்டத்தை இந்த சேதாரக் குறைப்பின் மூலம் ஓரளவு ஈடுகட்ட முடியும்.. இப்படி குட்டி குட்டி ரகசியங்களை சரியாக பின்பற்றினாலே போதும்.. தங்கம் உங்கள் கையை விட்டுப் போகாது என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்..!!!












Click it and Unblock the Notifications