தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
டெல்லி: கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் சவரனுக்கு ரூ.8,000 வரை விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க வட்டி விகிதங்கள், டாலர் மதிப்பு உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் சந்தை மாற்றங்கள் ஆகியவை தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இப்போது தங்கம் வாங்கலாமா இல்லை இன்னும் பொறுத்திருந்து வாங்கலாமா என்பது குறித்து நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தடாலடியாக குறைந்து வருகிறது. அமெரிக்கா - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

தாறுமாறாக சரிந்த தங்கம் விலை
கடந்த 8 நாட்களில் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.8,000 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் மீண்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரேட் ரூ.1,08,000 என்ற அளவில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் சென்னையில் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை சரிவுக்கான முக்கிய காரணமாக அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்பில் ஏற்பட்ட மாற்றம் என கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால், டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பிற நாடுகளின் நாணயங்களைப் பயன்படுத்தும், வாங்குபவர்களுக்கு அதிக விலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது.
அதே நேரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கக் கவலையை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்ந்த நிலையில் வைத்திருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது. பொதுவாக, அதிக வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலைக்கு பாதகமாக அமைகின்றன. ஏனெனில் தங்கம் நிலையான வருமானத்தை வழங்காது. ஆனால் பத்திரங்கள் மற்றும் வட்டி வருமானம் தரும் பிற முதலீட்டு கருவிகள் அதிக வருமானத்தை வழங்கும்.
தங்கம் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
இதுகுறித்து டேஸ்டிலைவ் நிறுவனத்தின் உலகளாவிய பொருளாதார ஆய்வுப் பிரிவு தலைவர் இல்யாஸ் பிவாக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் பணவியல் கொள்கை குறித்த எதிர்பார்ப்பில் ஏற்பட்ட மாற்றமே" என்றார். மேலும், "அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை குறித்த எதிர்பார்ப்பில் ஏற்பட்ட மாற்றம், பத்திர வருவாய் விகிதங்களின் உயர்வு மற்றும் டாலரின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை தங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சிஎம்இ பெட்வாட்ச் கருவியின் கணிப்பின்படி, வரும் டிசம்பர் மாதத்திற்குள் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக வர்த்தகர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது குறித்து நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:- சர்வதேச முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது தொடர்ந்து முதலீடு செய்து வருவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை இன்னும் சிறிதளவு குறையும்.
தங்கம் வாங்க இது தான் சரியான தருணம்
ஆனால், போர் நிறுத்தம் ஏற்பட்டால் தங்கம் விலை மீண்டும் உயரும். தங்கம் விலை குறைந்தாலும் மீண்டும் ஏறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. தங்கம் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு இது சரியான தருணம். தங்கம் விலை சரிந்து வருவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரியும். அப்போது தங்கத்தின் விலை மீண்டும் உயரும்.
எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம். முதலீட்டாளர்கள் சிறிது சிறிதாக தங்கத்தை வாங்கலாம். காரணம் தங்கம் விலை மீண்டும் எப்போது உயரும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே இது தங்கம் வாங்க சரியான தருணம் என்று சொல்லலாம். வெள்ளியின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications