கிராமுக்கு தங்கம் விலை உயர்ந்தும் மவுசு குறையல.. ஏன் தெரியுமா? முதலீட்டாளர்களின் "2026 தங்க ரகசியம்"
சென்னை: உலக பொருளாதார சூழலில் நிலவும் நிச்சயமற்ற நிலை காரணமாக தங்க சந்தை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதேபோல தங்கம் விலை உயர்ந்தாலும் தங்க நகைகள் வாங்குவதையும் மக்கள் நிறுத்தவில்லை.. வரக்கூடிய 2026ம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் சொல்வதென்ன?
வட்டி விகிதங்கள் குறையும் போக்கு, புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகள் பெரிய அளவில் தங்கத்தை கையிருப்பாக சேர்த்து வருவது போன்ற காரணங்கள் சமீப காலங்களில் தங்கத்தின் விலையை உயர்த்தியுள்ளன.

இந்த போக்கு அடுத்த ஆண்டிலும் தொடருமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. பல சந்தை நிபுணர்கள் தங்கம் இன்னும் உயர்வை காணலாம் என நிபுணர்கள் கணித்து சொல்கிறார்கள்.. சிலர் சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 5,000 டாலர் வரை விலை செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள்..
தங்க சந்தை சரிவு
அதே நேரத்தில், தங்க சந்தையில் சரிவு ஏற்படலாம் என்ற எச்சரிக்கையும் சில பொருளாதார வல்லுநர்களிடமிருந்து வெளிப்படத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி வரக்கூடும் என்ற கருத்துகள் பேசப்பட்டாலும், தற்போதைய சூழலில் அது நடைமுறையில் சாத்தியமா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது.
குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஆபரணத் தங்கத்திற்கான தேவை மிக அதிகமாக இருப்பதால், விலை பெரிய அளவில் சரிவதற்கான வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம், தேவையை ஊக்குவிக்க அரசுகள் உள்நாட்டு வரி கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால், உள்ளூர் சந்தைகளில் தங்கத்தின் விலையில் ஓரளவு தளர்வு காணப்படலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
முதலீட்டாளர்கள் குழப்பம்
இதனால் 2026ம் ஆண்டில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா, இல்லையா என்ற குழப்பம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளது. தங்கத்தைத் தவிர வேறு எந்த முதலீடுகள் நல்ல பலன் தரும் என்பதும் சோஷியல் மீடியாவில் விவாதமாகி வருகிறது.
இதற்கிடையே, சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவும் தங்க சந்தையை பாதித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தங்க நகைகளுக்கான வரி சலுகைகளை சீனா அரசு நீக்கியதால், நகைகள் வாங்கும் மக்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விற்பனை சரிவு
ஏற்கனவே தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால், அங்கு நகை விற்பனை சரிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை அடுத்த ஆண்டிலும் தொடர்ந்தால், உலகளாவிய தங்க தேவையில் தாக்கம் ஏற்பட்டு விலை குறைய வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இத்துடன் அமெரிக்க டாலர் வலுவடையும் போக்கும் தங்கத்திற்கு எதிரான ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. டாலர் வலுவாக இருக்கும்போது, அமெரிக்க பத்திர சந்தை உள்ளிட்ட பிற முதலீட்டு வாய்ப்புகளுக்கு முதலீடுகள் நகரும் சாத்தியம் அதிகரிப்பதால், தங்கத்தின் மீது இருக்கும் முதலீட்டு ஆர்வம் குறைந்து விலைக்கு அழுத்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைலைட் - தங்கத்திற்கான மவுசு
இதில் ஹைலைட் என்னவென்றால், இத்தனை நெகட்டிவ் காரணிகள் இருந்தாலும், நீண்டகால அடிப்படை காரணிகள் இன்னும் தங்கத்திற்கு ஆதரவாகவே உள்ளன.
உலக அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடரும் வரை, பாதுகாப்பான முதலீடு என்ற தங்கத்தின் மதிப்பு குறைய வாய்ப்பில்லை என்ற கருத்தும் வலுவாக உள்ளது. எனவே, விலை குறையும் தருணங்களை நீண்டகால முதலீட்டிற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்படுகிறது.
நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ் இதுதான்
2025ல் தங்கம் 67% உயர்ந்தாலும், 2026ல் அதுவும் மிகவும் விலை உயர்ந்ததாக இல்லை என்றும் மாதந்தோறும் சிறிய தொகையை SIP மூலம் தங்க நிதிகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பங்குகளுடன் ஒப்பிடும்போது, தங்கத்திற்கு தனி வருவாய் இல்லை என்பதால், அதிக எதிர்பார்ப்புடன் வாங்கக் கூடாது. புதிய முதலீட்டாளர்கள் சிறிய அளவில் தொடங்க வேண்டும், பழையவர்கள் SIP அல்லது SGB மூலம் தொடரலாம்.. எனவே அதிக உயர்வு எதிர்பார்க்காமல் ஜஸ்ட் 20% வரை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
கட்டுப்பாடில்லா தங்கம், மத்திய வங்கி கொள்முதல் மாற்றம், விலை உயர்வு மற்றும் உலக பொருளாதார சூழ்நிலை போன்ற அபாயங்கள் இருந்தாலும், நீண்டகாலத்தில் தங்கம் பாதுகாப்பான முதலீடு ஆகும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்...!!












Click it and Unblock the Notifications