எகிறும் தங்கம் விலை! குறைய வாய்ப்பே இல்லையாம்.. ஆனந்த் சீனிவாசன் ஒரே போடு! அப்போ எவ்வளவுதான் உயரும்?
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ தாண்டி தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியிருக்கும் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை இன்னும் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தங்கம் விலை கேப் விடாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. நேற்று கூட காலை தங்கம் விலை குறைவது போலச் சற்று குறைந்தாலும் மதியமே டாப் கியருக்கு போய் விட்டது. இப்படித் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்தை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இன்றைய தினமும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200 விற்பனையானது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.10,150க்கு போனது.

ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
இதற்கிடையே தங்கம் விலை உயர்வு தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் மேலும் கூறுகையில், "ஒட்டுமொத்தமாகப் பங்குச்சந்தை பலவீனமாக இருக்கிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நேற்று மாலை ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,060க்கு விற்கப்பட்டது. இதுபோக ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் தனி.. கில்லி போலத் தங்கம் விலை இருக்கிறது. நான் சொன்ன இலக்கை தங்கம் விலை ஏற்கனவே அடைந்துவிட்டது. கடந்த 4, 5 நாட்களாக இதே ரேஞ்சில் தங்கம் விலை நிலையாக இருக்கிறது. 24 கேரட் தங்கம் ரூ.10,700க்கு போய்விட்டது.
என்னைப் பார்க்கும் நபர்கள் எல்லாரும் தங்கத்தை இப்போது வாங்கலாமா என்றே கேட்கிறார்கள். நான் எல்லாருக்கும் சொல்வது ஒன்றுதான். உங்களிடம் தங்கமே இல்லை என்றால் வாங்குங்கள். ஏற்கனவே இருக்கிறது என்றால் அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருங்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கத்தை வாங்குங்கள். ஏனென்றால் தங்கம் விலை என்னவாகும் என்றே நமக்கு தெரியாது.
தங்கம் விலை குறையுமா?
அதற்காக நான் தங்கம் விலை குறைகிறது எனச் சொல்லிவிட்டதாக நினைக்க வேண்டாம். தங்கம் விலை குறைவதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை என்பதே உண்மை. தங்கத்தில் மிக நீண்ட காலம் முதலீடு செய்தவர்கள் லாபத்தை வெளியே எடுக்கத் தங்கத்தை விற்றால் மட்டுமே அது கொஞ்சம் குறையும். அதுவும் கூட ரூ.100, 200 மட்டுமே குறையும். அப்படிக் குறையவில்லை என்றால் ராக்கெட்டில் போய்க் கொண்டே இருக்கும்.
செப்டம்பர் 16, 17 தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெறுகிறது. அதில் வட்டி குறைப்பு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்க மார்கெட் 5% உயர்ந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குப் போய் கொண்டி இருக்கிறது. ஏஐ காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தை ஓரளவுக்கு உயர்ந்தாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும். அதுவும் ஒரு நெகடிவ் செய்தி தான்.
எவ்வளவு உயரும்?
இதனால் அமெரிக்க மத்திய வங்கி அடுத்த 2,3 மீட்டிங்கில் வட்டி விகிதத்தை மேலும் குறைத்தால் தங்கம் விலை கும்னு ஏறிடும். என்னைப் பொறுத்தவரைத் தங்கம் விலை 15% வரை உயரலாம். ரூ.8500ல் 15% உயரும் என்றேன். ரூ.9500ல் கூட 15% எனச் சொன்னேன். அதிலும் கிட்டத்தட்ட 5% வந்துவிட்டது. தற்போதைய சூழலை வைத்து பார்த்தால் 24 கேரட் தங்கம் விலை ரூ.11,500 முதல் ரூ.12,000 வரை போகும். 22 கேரட் தங்கமே ரூ.11,000 வரை போகும்.
இது நடந்தால் குறையும்
திடீரென எல்லா உலக தலைவர்களும் பேசி சமாதானம் ஆனால் மட்டுமே தங்கம் விலை குறையும். ஆனால், அது நடக்க வாய்ப்பே இல்லை என்றே சொல்ல வேண்டும். உக்ரைன் மீதான தாக்குதலை இப்போது தான் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என டிரம்ப்பிற்கு ரஷ்யா சவால் விடுத்து இருக்கிறது. டிரம்ப் சவுண்ட் விடுவாரே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று உலக நாடுகள் நினைக்க ஆரம்பித்துவிட்டன. இவை எல்லாமே தங்கத்திற்குச் சாதகமான விஷயம்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications