தங்கத்திலே மோதிரம்.. அதுவும் 40 பிறந்த குழந்தைகளுக்கு! சென்னையில் நயினார் நாகேந்திரன் தந்த சர்ப்ரைஸ்
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் எகிறி வருகிறது.. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,270 க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ. 142க்கும் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் பிறந்த தினமா நேற்றைய தினத்தில், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்ற அறிவிப்பானது, பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தன்னுடைய 75வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்கு இந்தியாவின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்து கூறியிருந்தனர்.. அதேபோல பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்..

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, மோடியுடன் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட செல்பியை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புத்த மத தலைவர் தலாய் லாமா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தனர்.
மோடி பிறந்தநாளை சேவை வாரம் என அக்டோபர் 2ம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மோடி பிறந்தநாள் விழாவில் நாடு முழுவதும் ரத்த தானம் நடைபெற்று வருகிறது.. அதில் பாஜகவினருடன் தொண்டு நிறுவனங்களும் இணைந்து 2 லட்சம் யூனிட் ரத்தம் வழங்கி வருகிறார்கள்..
அதேபோல பிரதமரின் பிறந்தநாளையொட்டி, இந்தியா முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. தமிழகத்திலும் இதுபோன்ற நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன..
அந்தவகையில், சென்னையிலும் வெகு சிறப்பான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில், ராயபுரம், ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு, 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்... இதுகுறித்து நயினார் நாகேந்திரன் சொல்லும்போது, "பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் துாய்மை பணி மேற்கொண்டோம். ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், மோடி பிறந்த நாளில், பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நேற்று பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஏற்கனவே அணிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால், நேற்றைய தினமே, மேலும் 13 குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்தனர்.. இதையடுத்து, அந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, குழந்தைகள் பிறந்ததுமே அவை அணிவிக்கப்பட்டன. இது பெற்றோர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸாக அமைந்திருந்தது.












Click it and Unblock the Notifications