“தங்கமும் கடவுளும் ஒண்ணு”.. வெறும் 1 பைசா கூடுதல் செலவில் தங்க மோதிரம்! ஜோய் ஆலுக்காஸ் சொன்னது என்ன?
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரையில் தொடங்கி வைத்தார். தங்க மோதிரங்களை வெறும் 1 பைசா கூடுதல் செலவில் தயாரித்து வழங்கியுள்ள ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தரப்பில் இதுகுறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு தங்கம் விலையை தவிர்த்து, மோதிரங்கள் செய்கூலி, BIS ஹால்மார்க் முத்திரை, காப்பீடு, போக்குவரத்து மற்றும் பேக்கிங் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து வெறும் ஒரு பைசா மட்டுமே கட்டணமாக குறிப்பிட்டு ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் மிக குறைந்த விலையைக் கோரிய L1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு 70% மோதிரங்களை இந்த நிறுவனமே தயாரித்து வழங்குகிறது.
தற்போது முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள 89,955 தங்க மோதிரங்கள், அதிக பிரசவங்கள் நடைபெறும் 107 அரசு தாய்சேய் நல மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த மோதிரங்கள் அனைத்தும் அரசு பரிந்துரைத்த ஒரு கிராம் எடை மற்றும் 22 கேரட் தூய்மைத் தரத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மோதிரத்திலும் BIS ஹால்மார்க் முத்திரை இடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான பேக்கிங்கில் இந்த மோதிரங்கள் அடைக்கப்பட்டு, அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4.41 லட்சம் புதிதாகப் பிறந்த பெற்ற குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோய் ஆலுக்காஸ் குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், "உன்னதமான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஜோய்ஆலுக்காஸ் இணைந்திருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். ஒரு குழந்தையின் பிறப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும்.
நமது பாரம்பரியத்தில் தங்கம் என்பது எப்போதும் ஆசிர்வாதம் மற்றும் மங்களகரமான தொடக்கத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. தமிழக மக்கள் பல ஆண்டுகளாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்துள்ளனர். இந்த உன்னதமான திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது," என்றார்.
ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ரீடெய்ல் ஹெட் ராஜேஷ் கிருஷ்ணன் பேசுகையில் "பேக்கிங், செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் கட்டணங்கள் எதுவும் சேர்க்கவில்லை. தங்கமும் கடவுளும் ஒன்று. பிறந்த உடன் குழந்தைகளுக்கு கிடைக்கும் முதல் கிப்ட் தங்கம்.. இதுவே ஒரு நல்ல விஷயம். இதை மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறோம். நம்ம கடை ஒரு ராசியான கடை. இதனை குழந்தைகளுக்கு தரும்போது அவர்கள் மிகப்பெரிய ஆளாவார்கள் என ஒரு நம்பிக்கை.
மொத்தமாக, 4,41,667 மோதிரங்கள் தயாரிக்குமாறு கூறியுள்ளனர். 2004ல் தமிழ்நாட்டில் ஜோய் ஆலுக்காஸ் தொடங்கப்பட்ட பிறகு எங்களது மிகப்பெரிய வளர்ச்சி தொடங்கியது. நாங்கள் வெறும் 1 பைசா செலவில் தயாரித்துக் கொடுக்கிறோம். தமிழ்நாட்டுக்கு திருப்பிக் கொடுக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
