ரேசன் கார்டில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்க அரசு புது அதிரடி! ரேஷன் பயனாளிகளுக்கு குட்நியூஸ்
சென்னை: ரேஷன் கார்டில் இருந்து இறந்தவர் பெயர் நீக்கப்படாததால், அவர்களுக்குரிய பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. இதனால், அரசுக்கு கூடுதல் செலவாகி வருகிறது. இந்நிலையில், உணவுத்துறை இறந்தவர்களின் பெயர்களை தொடர்ந்து நீக்கி வரும் நிலையில், முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மாதந்தோறும் அதிகபட்சம், 35 கிலோ அரிசி; முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒரு கார்டில், ஒரே நபர் இருந்தாலும்கூட, 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதனை தவிர, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயில், 2 கிலோ சர்க்கரை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு வருடத்துக்கு ரூ.12,500 கோடி செலவிடுகிறது.
தமிழக ரேஷன் கடைகள்
தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 35,000 முதல் 40,000 பேர் வரை இறப்பதாக உணவு வழங்கல் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து உரிய நேரத்தில் நீக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக, அவர்களுக்குரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
அரசுக்கு கூடுதல் செலவு
இதனால், தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும்,
இந்த வீண் செலவு, அரசின் நிதி நிர்வாகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.. மேலும், இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதால், அந்தப் பொருட்கள் ரேஷன் கடைகளில் கையாடல் அல்லது தவறான பயன்பாட்டுக்கும் வழிவகுக்கலாம்..
அதனால்தான், இறந்தவர்களின் பெயர்களை உடனடியாக ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டுமென உணவு வழங்கல் துறை வலியுறுத்தியவாறே உள்ளது.. குடும்ப உறுப்பினர்கள், உறவினரின் மரணத்தை உறுதி செய்யும் ஆவணங்களுடன் (மரணச் சான்றிதழ்) அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும்..
ஆன்லைனில் விண்ணப்பம்
அதுமட்டுமல்ல, ஆன்லைன் முறையிலும் இதுகுறித்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தவாறே உள்ளது.. அதாவது பெயரை நீக்கம் செய்ய desca.py.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இதனை தவிர, ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யவும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் மாவட்ட அளவில் சிறப்பு குழுக்களும் இயங்கி வருகின்றன..
மொத்தத்தில், மருத்துவ துறையிடம் இருந்து, மாதந்தோறும் இறந்தவர் விபரங்களை பெற்று, ரேஷன் கார்டில் இருந்து, அவர்களின் பெயர்களை நீக்கும் பணியை, உணவு வழங்கல் துறையே மேற்கொண்டுள்ளது.
இறந்தவர்களின் பெயர்
அந்தவகையில், இறந்தவர்களின் பெயர்களை மருத்துவ துறையிடம் தகவல் பெற்று, ரேஷன் கார்டுகளில் மாதந்தோறும் சராசரியாக, 40,000 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன..
இதில், ஒரே மாதிரியாக பெயர் உள்ள சிலரின் பெயரில் சந்தேகம் இருந்தால் மட்டும், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய விசாரணைக்கு பிறகு நீக்கப்படுகிறது.
தமிழகம் முழுதும், 2.27 கோடி கார்டுகளில், 7 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், நடப்பாண்டு வரை 1.83 லட்சம் ரேஷன் கார்டுகளில் இருந்து, 6.15 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று உணவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications