குட் நியூஸ் சென்னைக்கு.. போட் கிளப் டூ பனகல் பூங்கா வரை மெட்ரோவில் "மயில்" வந்தாச்சு! பெரிய ரிலீஃப்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் வரை செல்லும் வழித்தடத்தில் சுரங்கப்பணி தற்போது முன்னேறி வருகிறது. இந்த வழித்தடத்தில் பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை சுரங்கம் தோண்டும் பணி ஜரூராக துவங்கப்பட்டுள்ளது.. இந்த செய்திதான் சென்னைவாசிகளை குஷிப்படுத்தி வருகிறது.. இதனால் கிடைக்கக்கூடிய வசதிகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரையில் 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

மயில் சுரங்கம்
இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பபாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு சுரங்கப் பாதை பணிகள் நடந்து வருகிறது.
ஒவ்வொன்றும் சுமார் 4 கிமீ தூரம் கொண்டதாகும். 2 பக்கமும் தோராயமாக 16 கிமீ நீளத்தில் சுரங்க பாதையை முடிக்க 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
போட் கிளப் டூ பனகல் பூங்கா
இந்நிலையில்தான், பனகல் பூங்கா முதல் போட் கிளப் நிலையம் வரையில் சுரங்கம் தோண்டும் பணி தற்போது ஆரம்பமாகி உள்ளது.. இந்த பணிக்காக 'மயில்' என்று பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்க இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது...
மயில் என்ற இந்த இயந்திரம் சுமார் 1.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கத்தை அமைக்க உள்ளது. ஏற்கனவே கோடம்பாக்கம் முதல் பனகல் பூங்கா வரை சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்த இந்த இயந்திரம், இப்போது அடுத்த கட்டமாக போட் கிளப் நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
100 அடி ஆழம் - சவாலான பணிகள்
இந்த சுரங்கப்பாதை நந்தனம் வழியாக சென்று, அடையாறு சந்திப்பை கடக்கிறது. குறிப்பாக நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே, முதல் கட்ட மெட்ரோ ரயிலுக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளுக்கு கீழே இந்த புதிய சுரங்கம் அமைக்கப்பட வேண்டியுள்ளதால், பணிகள் மிகவும் கவனமாகவும் சவாலாகவும் நடைபெறுகின்றன.
சில இடங்களில் தரை மட்டத்திலிருந்து சுமார் 100 அடி ஆழம் வரை தோண்ட வேண்டியிருப்பதால், தொழில்நுட்ப ரீதியாக இது கடினமான பணியாக உள்ளது.
இந்த சுரங்கப்பாதை அமைக்கும் வேலைகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நெரிசல் குறையும், பயணம் எளிதாகும்
இந்த மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் நிறைவேறுவதன் மூலம் சென்னை மக்களுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்க போகிறதாம்.. என்னென்ன தெரியுமா?
முதலாவதாக, நகரின் முக்கிய பகுதிகளை மெட்ரோ ரயில் நேரடியாக இணைப்பதால், தினசரி போக்குவரத்து மிகவும் எளிதாகிவிடும்.. இப்போது சாலை போக்குவரத்தில் சிக்கி பல மணி நேரம் செலவிடும் மக்கள், மெட்ரோ மூலம் குறைந்த நேரத்தில் இலக்கை அடைய முடியும்.. அதுமட்டுமல்லாமல் இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையக்கூடும்..
தனியார் வாகனங்களின் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளதால், எரிபொருள் செலவு குறையும், அதேசமயம் காற்று மாசும் மட்டுப்படும்.. இதனால் சுற்றுச்சூழலுக்கும் ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடும்.
நிலம், சொத்து மதிப்பு
அதுமட்டுமல்ல, மெட்ரோ திட்டம் நகர வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும். மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகும், நிலம் மற்றும் சொத்து மதிப்பும் உயரும். மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் இப்படி அனைவருக்கும் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயண வசதி கிடைக்கும்.
மொத்தத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ வழித்தடம் சென்னையின் போக்குவரத்து முகத்தை மாற்றும் முக்கிய திட்டமாக அமைந்து மக்களுக்கு பல வசதிகளை தரப்போகிறது.












Click it and Unblock the Notifications