ரேஷன்தாரர்களுக்கு குட் நியூஸ்! இந்த 2 தேதியில் வீடு தேடி வருது ரேசன் பொருட்கள்.. அட்டைதாரர்கள் குஷி
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், முதியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை, இம்மாதம் 5, 6ம் தேதிகளில் மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது கார்டுதாரர்களுக்கு குஷியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின்கீழ், சென்னையில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

வீட்டுக்கு வீடு ரேஷன் பொருள்
இதன் விநியோக தேதி என்ன என்பதை, அந்தந்த நியாயவிலை கடைகளின் அறிவிப்பு பலகையிலிருந்தே கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தின்கீழ் 21.70 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு, மாதந்தோறும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.. இதற்கெனவே வாகனங்களில் ரேஷன் பொருட்களை ஊழியர்கள் எடுத்து சென்று சப்ளை செய்கிறார்கள்..
இந்த மாதம் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், முதியோரின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணியை வருகிற 5 மற்றும் 6ம் தேதிகளில் மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டிருந்தது..
ரேஷன் கடைகளில் 100% இருப்பு
அதன்படியே 100% ரேஷன் பொருட்களை கிடங்குகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது வினியோகத்திட்ட பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
5, 6 தேதிகளில் விநியோகம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6-ந் தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளி கள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை
முன்னதாக, அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வருகிற 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.. காரணம், தீபாவளிக்கு, பச்சரிசி, பாமாயிலின் தேவை வீடுகளில் அதிகமாக இருக்கும் என்பதால், ரேஷன் பொருட்களை கார்டுதாரர்களுக்கு, வரும் 10ம் தேதிக்குள் ஒரே தவணையில் வினியோகம் செய்ய வேண்டும் என்று, கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை கருத்தில்கொண்டு, ரேஷன் கடைகளுக்கு 100 சதவீத பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்பும் பணியில், நுகர்பொருள் வாணிப கழகம் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications