தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறை.. வீட்டுக்கே தபாலில் வரும் சொத்து ஆவணங்கள்.. அரசு குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பத்திரப்பதிவு ஆவணங்கள் இனி பதிவு தபாலில் வீட்டுக்கே வந்துவிடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்திரப்பதிவு முடிந்த உடன், சொத்து பதிவு ஆவணங்களை இனி வீட்டுக்கே பதிவு தபாலில் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பத்திரப்பதிவு செய்வோர் அலையக்கூடாது என்பதற்காக எங்கும் பதிவு திட்டத்தை அமல்படுத்திய அரசு, அதன்பிறகு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கே வராமல் பதிவு செய்யும் திட்டத்தையும் கொண்டு வந்தது. அந்த வரிசையில் இப்போது ஆவணங்களை வாங்கக்கூட வர வேண்டாம்.. வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 'எங்கும் பதிவு' திட்டத்தின் கீழ் சொத்து பதிவு முறைகள் படிப்படியாக எளிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் முதல் முறையாக மனை வாங்குபவர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கான பதிவு நடவடிக்கைகளில், பதிவு அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் அடையாள சரிபார்ப்பு, கைரேகைப்பதிவு மற்றும் ஆவணங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவை பாதுகாப்பான இணையவழி முறையில் மேற்கொள்ளப்படும் வகையில் ஆளில்லா பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அச்சு மையம்
எனினும், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் காகிதப்பிரதியை பெறுவதையே பொதுமக்களில் பலர் விரும்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாப்பான முறையில் அச்சிட்டு வழங்குவதற்காக ஒரு அச்சு மையம் அமைக்கப்பட உள்ளது.
8 மணி நேரத்தில் வந்துவிடும்
இந்த அச்சு மையத்தில் பாதுகாப்புத்தாளை பயன்படுத்தி பதிவு ஆவணங்கள் அச்சிடப்படும். அச்சிடப்பட்ட ஆவணங்களை இந்திய அஞ்சல் துறை பெற்று, சம்பந்தப்பட்ட சொத்து வாங்குபவரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்குள் ஆவணங்களை வழங்குவதற்கான சேவை காலவரம்பு நிர்ணயிக்கப்படும். தொலைதூர மாவட்டங்களுக்கு தனியான காலவரம்பு நிர்ணயிக்கப்படும்.
டெண்டர்
இந்த அச்சு மையத்தை அமைத்து 5 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான சேவை வழங்குனர் போட்டி ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்படுவார். அச்சு எந்திரங்களை நிறுவுதல், பணியாளர்களை நியமித்தல் மற்றும் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை அந்த சேவை வழங்குநர் மேற்கொள்வார்.
இந்த பதிவு ஆவணங்களை அச்சிடுவதற்குத் தேவையான பாதுகாப்புத் தாளை தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திடம் இருந்து பதிவுத்துறை நேரடியாக கொள்முதல் செய்யும். பாதுகாப்புத் தாளின் பாதுகாப்பு மற்றும் கணக்கீடு பதிவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்காக 2026-27-ம் நிதியாண்டில் இந்த அச்சு மையத்தை அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. சேவை வழங்குனரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப் பணிகளை பதிவுத்துறை மேற்கொள்ளும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதிப்பு என்ன
அரசின் இந்த திட்டம் என்பது அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் முதல் முறையாக மனை வாங்குபவர்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் ஆகியோருக்கு பேருதவியாக இருக்கும். அதேநேரம் பத்திரப்பதிவு செய்ய அலுவலகம் போகத்தேவையில்லை.. இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு, இருக்கும் இடத்திற்கே ஆவணங்கள், பத்திரங்களை அரசின் இணையதளத்தில் எளிதாக மக்களே உருவாக்கி கொள்ளும் நடைமுறை போன்றை பத்திரப்பதிவு அலுவலகத்தை சுற்றி ஜெராக்ஸ், பிரிண்டிங் கடைக்காரர்கள், ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் மட்டுமின்றி, அந்த அலுவலகங்களின் வருகையாளர்களை நம்பி சிறு தொழில் செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை கணிசமாக பாதிக்கக்கூடும் என்பது எதார்த்தமான உண்மை.


Click it and Unblock the Notifications
