சர்வர் பிரச்சனை.. சரியும் இணைப்புகள்! அதளபாதாளத்தில் அரசு கேபிள்டிவி! சிஎம் விஜய்க்கு பறந்த கோரிக்கை
சென்னை: இந்தியாவிலேயே கேபிள்டிவி தொழிலை அரசு நடத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். எந்த மாநிலத்திலும் இல்லாத குறைந்த கட்டணம் வசூலிக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இதற்கு காரணம் அரசு கேபிள் டிவி நிறுவனமாகும். தற்போது மோசமான நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனம் இருக்கும் நிலையில், அதனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்களும், கேபிள்டிவிஆபரேட்டர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டு தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் அரசு நேரடி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 2011ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மட்டும் தான் என்ற நிலையில் ஆப்பரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகளை குத்தகைக்கு எடுத்து 70 லட்சம் இணைப்புகளுடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக செயல்பட்டு வந்தது.

டிஜிட்டல் காலத்தில் மந்திரா நிறுவனம் மற்றும் தனியார் கேபிள்டிவி நிறுவனமும் அரசு கேபிள் தலைவரான உடுமலை ராதாகிருஷ்ணனை வைத்து 35 லட்சம் இணைப்புகளாக சரிபாதியாக குறைத்தனர். அதன் பிறகு திமுக ஆட்சியில் பொறுப்பேற்ற அரசு கேபிள் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு 12 லட்சம் இணைப்புகளாக குறைத்தார்.
இதனால் அரசு கேபிள் ஆப்பரேட்டர்களின் நம்பிக்கையை திமுக அரசு இழந்த நிலையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு கேபிள்டிவி தொழிலில் நன்கு அனுபவம் வாய்ந்த நபரான தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான தஞ்சை ஜீவாவை கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை அமைத்து அதற்கு முதல் தலைவராக நியமித்தது திமுக அரசு. ஆனால் தனியார் நிறுவனங்களின் சதித்திட்டங்களால் அரசு கேபிள் டிவிக்காக எந்த நிதியையும் ஒதுக்காமல் இருந்தது.
ஆனால் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஓடிடி வசதியுடன் கூடிய ஐபி டிவியை அரசு கேபிள்டிவியில் தனது சொந்த செலவில் ஒளிபரப்பு செய்தது மட்டுமல்லாது பழுதான செட்டப்பாகஸ்களை பழுதுநீக்கம் செய்து தந்தது. ஆபரேட்டர்களின் பல ஆண்டுகால கோரிக்கையான எச்டி செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கிய
தஞ்சை ஜீவாவை தற்போது ஆட்சிசெய்யும் தவெக அரசு பயன்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கேபிள்டிவி மற்றும் ஐபிடிவி சேவைகளை வழங்க வேண்டும் என ஆபரேட்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு விமர்சனங்கள் ஒத்துழைப்பு இல்லாத சூழலில் அரசு கேபிள்டிவியை தக்கவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு பல சவால்களை சந்தித்து அரசு கேபிள் டிவியின் கடன் சுமையை குறைத்து லாபகரமான நிறுவனமாக மாற்றப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் அது மோசமான நிலைக்கு செல்லும் நிலையில், கடந்த ஒருமாதமாக ஏற்பட்டுள்ள சர்வர் பிரச்சனையும் வந்துள்ளது.
இதனால் தமிழக அரசு இந்த பிரச்சினையை சரிசெய்து, ஆப்பரேட்டர்களுக்கு தேவையான செட் டாப் பாக்ஸ்களை தடை இல்லாமல் வழங்க வேண்டும். மேலும் மாவட்டம் தோறும் பழுது பார்க்கும் மையங்கள் அமைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.அரசு கேபிள் டிவி நிறுவனம் மீது தனியார் நிறுவனத்தால் போடப்பட்ட வழக்குகளை திறம்பட நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்.
மேலும், அரசு கேபிள் டிவி இணைப்புகளை அபகரித்த தனியார் நிறுவனங்களை முறைப்படுத்த, சரிந்து வரும் இணைப்புகளை உயர்த்த, புதிய டெண்டர்விடப்பட்டு அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்க உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு இவற்றை பரிசீலித்து உடனடியாக வாரிய தலைவர் மற்றும் ஆலோசனைக்குழுவை அமைத்து அரசு கேபிள்டிவி ஆபரேட்டர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு முழுவதும் ஆபரேட்டர்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகைதந்து முதல்வரின் தனிப்பிரிவிலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
