அரசு ஊழியர்களுக்கு அதிரடி.. இனி லீவு எடுக்க, சம்பளம் அறிய "இதுதான்" வழிமுறை.. ஆசிரியர்களுக்கு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு ஒன்றினையும் அறிக்கை மூலம் அரசு பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, 9 லட்சத்து 48 ஆயிரத்து 522 அரசு ஊழியர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.. அரசு துறைகள் அனைத்துமே தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டன.

அந்த வகையில், அரசு ஊழியர்களின் வசதியையும், நன்மையையும் கருத்தில் கொண்டு, ஏராளமான வழிமுறைகளை அரசு செய்து தந்து வருகிறது. அந்தவகையில், சர்வீஸ் ஃபைல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன..
சம்பள விவரம்: அதேபோல, அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்கவும், சம்பள விவரங்களை அறியவும், ஊழியர்களின் பணி அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்து, இதற்காகவே "களஞ்சியம்" என்ற செயலியை வடிவமைத்துள்ளது.. இனிமேல் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பதானால், இந்த செயலியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

மீண்டும் அறிவிப்பு: அந்த சுற்றறிக்கையில், "தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் விடுப்பு சார்ந்த விவரங்களை "களஞ்சியம்" என்ற புதிய செயலி வாயிலாக உள்ளீடு செய்து உரிய அலுவலருக்கு அனுப்ப வேண்டுமென கரூவூலக கணக்கு ஆணையரால் கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள், பணியாளர்கள் நடப்பு செப்டம்பர் 1-ம் தேதி முதல் எடுக்கும் விடுப்புக்கு இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும்.
பரிசீலனை: இந்த செயலியில் சம்பந்தப்பட்ட பள்ளி, விடுப்புக்கு விண்ணப்பிப்பவர், அதனை பரிசீலனை செய்பவர், ஒப்புதல் வழங்கும் அதிகாரி என நிர்ணயம் செய்து அதற்காக குழுவை உருவாக்கி விடுப்புகளுக்கான அனுமதியை பெற்று கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன், இந்தாண்டில் இதுவரை விடுப்பு எடுத்த நபர்களின் விவரங்களையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications