செம.. ஆளுக்கு ரூ.12,000! நோயால் முடங்கிய கட்டுமானத் தொழிலாளர்கள்.. கண்ணீர் துடைத்த தமிழ்நாடு அரசு
சென்னை: தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்க அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள ஆணையில், "மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்: -
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா (Moderate and Severe Persistant), சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்நிதியுதவியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும்.

இதற்கென ஆண்டுக்கு 60 இலட்சம் ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு 1.80 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். இத்திட்டத்தினால் சுமார் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்."
2. மேற்கூறிய அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தீவிர நோய் பாதிப்பு உதவித்தொகை வழங்கும் நலத்திட்டத்தை கீழ்காணும் நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளின்படி அறிமுகப்படுத்தி, அதற்கான உத்தேச செலவினத் தொகை ரூ.1,80,00,000/-னை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல் நிதியிலிருந்து மேற்கொள்ள உரிய ஆணைகள் வழங்குமாறு முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் வாரிய ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அ) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது பதிவு அட்டையினை இணைத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களிடம் (ச.பா.தி) இது தொடர்பாக விண்ணப்பிக்கப்படல் வேண்டும்.
ஆ) பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மேற்படி தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சிவில் சர்ஜன் தரத்திற்கு மேற்பட்ட அரசு மருத்துவரிடமிருந்து மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இ) தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை (அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்) மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பான மருத்துவ ஆவணங்களை கேட்பு மனுவுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஈ) மேலும், தீவிர நோய் பாதிப்பு குணமடையாமல் நீடிக்கும் நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டிற்கு சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை கேட்பு மனுவுடன் இணைத்து அளிக்க வேண்டும்.
உ) ஆண்டொன்றுக்கு ரூ.12,000/- வழங்கும் இந்நலத்திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
ஊ) தீவிர நோய் பாதிப்பு உதவித்தொகையானது மாதம் ஓன்றுக்கு ரூ.1,000/- வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக RECS மூலம் வழங்கப்படும்.
3. முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையரின் கருத்துருவினை ஏற்று, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா (Moderate and Severe Persistant), சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12,000/- வீதம் அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு வழங்குவதற்கான திட்டத்தை மேலே தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளின்படி அறிமுகப்படுத்தி, அதற்கான உத்தேச செலவினத் தொகை ரூ.1,80,00,000/-னை (ரூபாய் ஒரு கோடியே எண்பது லட்சம் மட்டும்) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.
4. இவ்வாணை நிதித் (LW&S.D/Edu-II) துறையின் அ.சா.கு.எண்.22095/2023, நாள் 07.06.2023-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications