ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை.. சட்டசபையில் வேல்முருகன் ஆக்ரோஷம்
சென்னை: ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என சட்டசபையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் எம்எல்ஏவான வேல்முருகன் ஆக்ரோஷமாக பேசினார்.
ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் நியாயமான அபிலாஷைகளை, கோரிக்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இம்மாமன்றம் இயற்றுகிறது. இந்த சட்டங்களை இயற்றி தமிழ்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக இருக்கும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். ஆளுநர் அதற்கு உடனடியாக கையெழுத்திட்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்ய தான் அவர் இருக்கிறார். ஆனால் அவர் தனது கடமையை, பணியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி எடுத்து கொண்ட உறுதிமொழியை செய்யத்தவறும் பட்சத்தில் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த பேரவை விதி 143 விதியின் கீழ் மறுஆய்வு செய்ய இங்கு கூடியிருக்கிறோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பிரிவு 200ன் கீழ் சட்டங்களை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளோம். இப்படி அனுப்பும் சட்டத்துக்கான முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் வாசித்துள்ளார். இந்த முன்மொழிவு என்பது தமிழக மக்களின் உணர்வுகளையும், வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற தவறிய ஆளுநரை நீங்கள் குறிப்பிட்டது போல் அரசியல் ரீதியாக, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு கருத்துரையின்பால் இந்த தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். முதல்வர் தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.
இந்த 10 மசோதாவை ஆய்வு செய்து நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எமது கட்சியின் சார்பிலும் மக்களின் சார்பிலும், ஜனநாயக மக்களின் சார்பிலும், இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஏற்றுக்கொண்டு நடக்கும் மக்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். உச்சநீதிமன்றம் இதில் தலையீட்டு தமிழக முதல்வர், பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதியரசர் மிகச்சரியாக ஆளுநர் என்று சொல்லக்கூடியவர்களை சுட்டியும், குட்டியும் காட்டி உள்ளனர்.
முதல்வர் சொன்னது போல் அவர்களை கொட்டு வைத்தாலும் ஏற்கிற மனம் போல் ஏதோ ஒரு சித்தாந்தம், சிந்தனையின் அடிப்படையில் ஆளுநராக பொறுப்பேற்று கொண்டு தொடர்ச்சியாக அவரது நடவடிக்கை என்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக உள்ளது. 7 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட முன்வடிவுகளை அவர் குப்பையில் போடுவது போல் அமைதி காக்கிறார். நான் காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தால் அது காலாவதியானது போலாகும் என பேசுகிறார்.
தமிழ்நாட்டு லட்சினை தூக்கி ஏறிகிறார். தமிழ்நாடு என்ற பெயரை தூக்கி எறிகிறார். தமிழ்நாடு தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி என்றால் கசக்கிறது. சமூக நீதி என்ற வரியை படிக்க மறுக்கிறார். உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகு அவர் திருப்பி அனுப்பி உள்ளார். முதல்வரால் கொண்டு வரப்பட்ட
இந்த மசோதாக்கள் மக்களுக்கானது. மண்ணுக்கானது. குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, மருத்துவமனை போன்ற சட்டங்களை எந்த காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்பதை நாடே அறியும். இந்த 10 மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதால் ஆளுநருக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications