ஆர்.என்.ரவி இல்லை.. ஆர்.எஸ்.எஸ் ரவி.. வெறும் தபால்காரர் தான்.. ஆளுநர் மீது உதயநிதி கடும் தாக்கு
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவுரை வழங்கிய, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் வெறும் தபால்காரர் மட்டுமே என்று விமர்சித்தார்.
தமிழகத்தில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 19) என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் தந்தை மகன் தற்கொலை செய்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நீட் எதிர்ப்பு தீவிரமானது.

இந்த நிலையில்தான் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். காலை 9 மணியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். இதில் சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மதுரை தவிர்த்து தமிழ்நாடு முழுக்க இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்னாவிரத போராட்டத்தை முடித்து நிறைவு உரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நீட் தேர்வால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இது அனைத்தும் தற்கொலை அல்ல.. கொலை.. ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் அழைத்து ஒரு கூட்டம் நடத்தினார்.
அப்போது கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாணவரின் தந்தை அம்மாசியப்பன் ஆளுநரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். என்னிடம் பணம் இருக்கிறது. இதனால் நான் கோச்சிங் சென்டருக்கு என் மகனை அனுப்பி படிக்க வைத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற செய்துவிட்டேன்.. ஆனால் நீங்கள் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்.. என்னை போல எல்லாராலும் கோச்சிங் செண்டருக்கு பணம் கொடுத்து அனுப்ப முடியாது.
இதனால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்றார். அதற்கு மிகவும் திமிறாக ஆளுநர் பதில் அளிக்கிறார். ஐ வில் நெவர், எவர்... என சொல்கிறார். நான் கேட்கிறேன் ஆளுநர் அவர்களே நீங்கள் யார்.. உ ஆர் யூ.. யூ ஆர் ஜஸ்ட் தி போஸ்ட்மேன்.. எங்க முதல்வர் சொல்வதை மத்திய அரசிடம் கொடுப்பது மட்டுமே உங்கள் வேலை. நீங்க ஒரு தபால்காரர்.. ஆர் என் ரவி கிடையாது.. அவரது பெயர் ஆர்எஸ்எஸ் ரவி.. ஆளுநர் அவர்களே நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்..
நீங்கள் உங்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுங்கள்.. திமுகவை எதிர்த்து போட்டியிடுங்கள்.. திமுக சார்பில் தலைவர்கள் யாரும் இல்லை.. திமுகவின் கடைக்கோடி தொண்டனை எதிர்த்து போடியிட்டு நீங்கள் வெற்றி பெறுங்கள் பார்ப்போம். அப்படி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம். . இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications