ஆளுநர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. வளைந்து கொடுத்தாரா விஜய்? கூட்டணி கட்சிகள் கொந்தளிக்க பின்னணி என்ன?
சென்னை: தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வரிசை இப்போது தமிழக அரசியலையே அதிர வைத்துள்ளது.. வழக்கமாகத் தமிழகத்தின் எந்த ஒரு அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும், ஆனால் ஆளுநர் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் அது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது பெரிய சர்ச்சையாகியுள்ளது.. இதைப் பார்த்த திமுக மற்றும் விஜய்க்கு ஆதரவாக இருந்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட முதல் நாளிலேயே தங்களது கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளது, தமிழக அரசியல் களத்தையே அசைத்து பார்க்க செய்துள்ளது..!!
தமிழகத்தின் தொன்மையான மரபுகளையும், உணர்ச்சிகரமான அடையாளங்களையும் முன்னிறுத்தி அரசியல் பயணத்தைத் தொடங்கிய தவெக தலைவர் விஜய், தனது முதல் அடியிலேயே "தமிழ்த்தாய் வாழ்த்து" விவகாரத்தில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து
வழக்கமாக தமிழக அரசு விழாக்களின் தொடக்கத்தில் ஒலிக்க வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து, இந்த முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது, வெறுமனே ஒரு வரிசை மாற்றமாக பார்க்கப்படாமல், தமிழினத்தின் அடையாளத்தைப் பின்னுக்கு தள்ளிய செயலாகவே அப்படித்தான் பார்க்கப்படுகிறது..
முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் நிலவிய இந்த நிலைமையை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட அந்தந்த மாநில பாடல்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் நிலையில், தமிழ் மண்ணில் தமிழ்த்தாய்க்கு இழைக்கப்பட்ட இழிவு இது என திமுக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது..
திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியும் இதற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஆனாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பதவியேற்றதுமே, மூத்த தலைவர் வீரமணியிடம் நேரில் சென்ற விஜய் வாழ்த்தையும் பெற்று வந்தது கவனம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி விமர்சனங்கள்
எனினும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை விட, விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவாக நின்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற தோழமை அமைப்புகளே இந்தக் குளறுபடியைக் கண்டு அதிர்ச்சியடைந்து கண்டனம் தெரிவித்திருப்பதுதான் இங்கே முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம்.. "தமிழை மூன்றாம் நிலைக்குத் தள்ளியது மரபை மீறிய செயல்" என இந்திய கம்யூனிஸ்ட் கூறியுள்ளது..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது நியாயமான வருத்தத்தைப் பதிவு செய்துள்ள விதம், இந்தப் பிரச்சனையின் ஆழத்தையே காட்டுகிறது.. இது புதிய அரசின் திட்டமிட்ட முடிவா அல்லது ஆளுநர் மாளிகையின் நெருக்குதலால் நிகழ்ந்த மாற்றமா என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
திருமாவளவன் கண்டனம்
ஆளுநருடனான அதிகாரப் போட்டியின் நிழல், பதவியேற்பு விழாவின் தொடக்கத்திலேயே விழுந்திருப்பது அரசியல் ரீதியாகப் பலவீனமான ஒரு தொடக்கத்தையே காட்டுகிறது.. குறிப்பாக, மேடையில் "தமிழன் சாதிக்க முடியும்" என்று முழங்கிய விஜய், தமிழின் முதன்மை அடையாளமான வாழ்த்துப் பாடலுக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தரத் தவறியது, தமிழ் தேசிய உணர்வாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது..
தவெக தரப்பில் முன்வைக்கப்படும் "புரோட்டோகால்" விளக்கங்கள் பேசும்போது சரியாக தோன்றினாலும், உணர்வுப்பூர்வமாகத் தமிழக மக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆளுநரின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு
அதேபோல ஆளுநரின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டில் விழா நடந்ததால் தேசிய கீதத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், ஒரு முதலமைச்சராக தனது முதல் மேடையிலேயே மாநிலத்தின் மரபைக் காக்க போராடியிருக்க வேண்டும் என்பதே பொதுவான எண்ணமாக இருக்கிறது..
முதல் நாளிலேயே கிளம்பியுள்ள இந்த புகார், வரும் நாட்களில் விஜய்யின் அரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒரு விரிசலை உண்டாக்கக்கூடிய காரணியாகக்கூட மாறலாம்..
சம்பிரதாயங்கள் - சடங்குகள்
அரசியலை பொறுத்தவரை "சம்பிரதாயங்கள்" என்பவை வெறும் சடங்குகள் மட்டுமல்ல, அவை ஒரு தலைவரின் கொள்கை நிலைப்பாட்டையே மக்களிடம் நேரடியாக காட்டக்கூடியது.
"விஜய் போன்ற ஒரு பெரிய தலைவர், 'தமிழ் பற்று' தான் தனது அரசியலின் உயிர்நாடி என்று சொல்லும்போது, இது போன்ற நிர்வாகத் தவறுகள் அவரது பெயருக்குச் சின்ன பாதிப்பை ஏற்படுத்தலாம்.. பதவியில் இருப்பவர்கள் உணர்வுகளை விட, வெறும் புரோட்டோகாலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும்போது என்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம்.
மாநில அரசின் கடமை
மாநில அரசின் கடமை
அதுமட்டுமல்ல, ஆளுநரின் அதிகாரம் அல்லது மத்திய அரசின் விதிகள் என்று காரணம் சொன்னாலும், தமிழகத்தின் தனித்துவமான மரபை நிலைநாட்ட வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு.
இப்போது, கூட்டணிக கட்சிகளே அதிருப்தி தெரிவிக்கும் நிலை உருவாகியிருப்பது, வரும் காலங்களில் நிர்வாக ரீதியான முடிவுகளில் விஜய் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டியுள்ளது. தொடக்கத்திலேயே எழுந்திருக்கும் இந்த சலசலப்பு, வரும் நாட்களில் ஆட்சியின் போக்கை மக்கள் இன்னும் கூர்மையாக கவனிக்கவும் வழி செய்துள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications