“தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆசியுடன் நடக்கிறது!” - ஆளுநர் ரவி
சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே உரசல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
தனது அறிக்கையில், "தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன்தான் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறது.

கஞ்சா உள்ளிட்ட ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசுப் பள்ளிகளில் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே உள்ளனர். ஏழ்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் பிறருக்கும் இடையேயான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது.
சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளான பிறகும், பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல்ரீதியாகத் தாக்கப்படும் பாகுபாடு நிலவுகிறது நாம் அவமானப்பட வேண்டியது. இளைஞர்களிடையே தற்கொலை விகிதங்கள் தேசிய சராசரியை விட தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழ் மொழியும் கலாசார மரபும் தேசத்தின் பெருமை. தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ்க் கலாசாரத்தின் மிகப்பெரும் அபிமானி நமது பிரதமர் மோடிதான்.
இன்று 'ஆகஸ்ட் 14' - பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது.
முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.
பல்வேறு போர்வையில் இதேபோன்ற சக்திகள் இன்றும் அதிகரித்து வருவதால், ஆழ்ந்த உணர்வுடன் இதே நாளை பாரதம் நினைவுகூர்கிறது. அவை பொய்கள் மற்றும் ஏமாற்றுச்செயல்கள் மூலம் தேசத்தின் தன்னம்பிக்கையை உடைக்கவும், நம் மக்களின் மன உறுதியைக் குலைக்கவும் முயல்கின்றன.
தேசத்தின் உறுதியை பலவீனப்படுத்தவும், வரலாற்றை திரும்பி நிகழ்த்தவும் நயவஞ்சகம் செய்யும் அவர்களை, தன்னம்பிக்கை கொண்ட சுயசார்பு பாரதத்தின் அற்புதமான எழுச்சியில் மகிழ்ச்சி கொள்ளாத வெளிவிரோத சக்திகள் ஊக்குவிக்கின்றன.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எண்ணத்தை நோக்கி நமது தேசம் அணிவகுத்துச் செல்லும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அவர்களின் தீய நோக்கத்துக்கு எதிராக ஒவ்வோர் பாரதியரும், குறிப்பாக தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது அறிக்கைக்கு அமைச்சர் கே.என்.நேரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications