தமிழகத்தில் கல்வி தரம் சிறப்பாக இல்லை! ஆளுநர் ரவி மீண்டும் சர்ச்சை.. அதற்கு சொன்ன காரணத்தை கேளுங்க
சென்னை: 'தமிழகத்தின் உயர் கல்விச் சிறப்பு' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆய்வு படிப்புகளின் தரம் சிறப்பாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்த அவர், இதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'தமிழகத்தின் உயர் கல்விச் சிறப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய தரவரிசையில் சிறந்த இடங்களைப் பிடித்த கல்வி மையங்களைக் கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் என்ஐஆர்எஃப் தரவரிசையில் டாப் இடங்களைப் பெற்ற சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 11 கல்வி நிறுவனங்கள் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டன.
ஆளுநர் ரவி: அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி, மீண்டும் தமிழகத்தில் கல்வித் தரம் திருப்திகரமாக இல்லை எனக் கூறியிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அவர் இதே போன்ற கருத்துகளைத் தெரிவித்தார். அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மீண்டும் அதேபோன்ற கருத்துகளை ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, "2020ஆம் ஆண்டு முதல் மூன்றாவது முறையாக இதுபோன்ற பாராட்டு விழா நடைபெறுகிறது. என்ஐஆர்எஃப் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் வருவது எல்லாம் மிகப் பெரிய சாதனை.. அதைச் சிறப்பாகச் செய்துள்ள தமிழக கல்வி நிறுவனங்களுக்கு வாழ்த்துகள்.. நாட்டின் சிறந்த கல்லூரிகளில் டாப் 20 இடங்களில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து இருக்கிறது.
மெட்ராஸ் ஐஐடி: மேலும், இதற்கு முன்பு வரை தமிழக பல்கலைக்கழகங்கள் தனித் தனியாகவே செயல்பட்டு வந்தனர்.. அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இருந்தது இல்லை.. அதேநேரம் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் அவர்களால் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது.
இந்த தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் முதல் இடத்தை ஐஐடி மெட்ராஸ் பிடித்துள்ளது.. மாநில அளவில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்திருப்பது பெருமையைத் தேடித் தரும் விஷயமாகவே இருக்கிறது. வேளாண்மை ,பொறியியல் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் நல்ல ரேங்கிங் பெற்றுள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்: ஐஐடி மெட்ராஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அறிவுசார் சொத்துக்களை உயர்த்துவதில் ஐஐடி மெட்ராஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. முன்பெல்லாம் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் மட்டுமே இணைந்து செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது அந்த நிலை தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
கல்வித் தரம்: தமிழ்நாட்டில் அதிகளவில் பிச்.டி முடிக்கிறார்கள். ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. பிஎச்.டி படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும்.. மாநிலத்தில் ஓரிரு கல்வி நிறுவனங்களில் மட்டுமே கல்வித் தரம் சிறப்பாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றி அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பிஎச்.டி கல்வித் தரத்தை நாம் உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் இருந்து நெட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். நெட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதன் மூலமாக ஜேஆர்எப் சலுகைகள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்த வேண்டும். நெட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications