தப்பித்த "அண்ணாமலை".. என்னது ஆளுநர் ரவி "அதுக்குத்தான்" அப்படி பேசினாரா? இவர் இப்படி சொல்லுறாரே!
சென்னை: அண்ணாமலைக்கு எதிரான சர்ச்சைகளை மடை மாற்ற ஆளுநர் ஆர். என் ரவி அவருக்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்று எண்ண தோன்றுகிறது, ஆளுநரின் பேச்சுக்கள் அண்ணாமலையை விமர்சன புயலில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் விமர்சனம் வைத்துள்ளார்.
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.
ஆளுநர் ஆர். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது.

ஆளுநர் பேச்சு
இந்த நிலையில் ஆளுநரின் இந்த பேச்சுக்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் விமர்சனம் வைத்துள்ளார். இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்லி சொல்வதை எல்லாம் நாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல், பொது பட்டியல் என்று உள்ளது. சில துறைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலும், சில துறைகள் மாநில அரசின் பட்டியலிலும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. இந்தியா ஒரு ஒன்றிய அரசு. இதுதான் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆளுநர் அந்த அரசியலமைப்பு சட்டத்தை முறையாக படித்து இருப்பார் என்று நம்புகிறேன்.

ஒன்றிய அரசு
மொழிக்கொள்கை பற்றி ஆளுநர் பேசுகிறார். மொழிக்கொள்கை என்பது ஆளுநரின் அதிகாரம் கிடையாது. ஒன்றிய அரசின் அதிகாரமும் கிடையாது. இந்தியாவில் 300 கிமீ தூரத்திற்கு மொழி மாறுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் மொழி மாறுகிறது. அப்படி இருக்கும் போது தேசத்திற்கே ஒரு மொழி இருக்க வேண்டும். தேசத்திற்கே ஒரு மொழிதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரிய தவறு. தமிழ்நாடு மட்டும் இந்த மொழி ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. கேரளாவில் எதிர்க்கிறார்கள், மேற்கு வங்கத்தில் எதிர்க்கிறார்கள். மற்ற மாநிலங்களை விடுங்கள்.

அரசியல்
நாம் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். குஜராத் முதல்வராக இருந்த போது மோடியே மாநில சுய உரிமை, மாநில சுயாட்சி குறித்து பேசியவர்தான். இப்போது அதே மோடி பிரதமர் ஆன பின் மாநில உரிமைக்கு எதிராக செயல்படுவாரா? டெல்லி சொல்வதை எல்லாம் மாநில அரசு கேட்க வேண்டும் என்று இல்லை. ஒன்றிய அரசுக்கு கொஞ்சம் கூடுதல் பவர் இருக்கலாம். அதற்காக அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆளுநர் ஆர். என் ரவி ஒரு நியமன பதவியில் இருந்து கொண்டு. அதற்கு ஏற்றபடியான விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் ஆளுநர் கொள்கை ரீதியான விமர்சனங்களை அவர் வைக்கிறார்.

தமிழ்நாடு - தமிழகம்
தமிழ்நாடு - தமிழகம் என்று சொன்னதாக இருக்கட்டும், இங்கு 50 ஆண்டுகளாக பிற்போக்குத்தனமான அரசியல் இருந்தது என்று ஆளுநர் பேசி இருக்கிறார். இது அரசியல்வாதிகள் பேசும் பேச்சு, பாஜகவினர் பேசும் பேச்சு. ஆளுநருக்கு இதில் கருத்து சொல்லும் உரிமையே இல்லை. பிற்போக்குத்தனமான, மதவாதமான பேச்சு இது. அவர் இந்த ஆட்சி மீது வைக்கும் விமர்சனம், பேச்சு எல்லாம் அவர் ஏதோ எதிர்பார்ப்பில் சொல்வது போல இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட ஆட்சி இவருக்கு உறுத்துகிறது. அமித் ஷா பேசுவதற்கும், ஆளுநர் பேசுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. அமித் ஷாவிற்கு ஊதுகுழலாக இருக்க இவர் எதற்கு ஆளுநர் பதவியில் இருக்க வேண்டும்? அவர் எப்படி அரசியல் பேசலாம்? இதுதான் அவர் மீது விமர்சனம் வைக்க காரணம்.

அண்ணாமலை
தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கு பிரஷர் அதிகம் ஆகி உள்ளது. அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவர் செயல்படும் விதம், கட்சியை நடத்தும் விதம் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக ஆடியோ, வீடியோ விவகாரங்கள் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமர்சனங்களை எல்லாம் மடைமாற்றுவதற்காக, இதை எல்லாம் மறக்க செய்வதற்காக ஆளுநர் இப்படி சர்ச்சையை கிளப்பியதாக சிலர் விமர்சனம் வைக்கிறார்கள். ஆளுநர் இதற்காகத்தான் இப்படி செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி நடந்ததற்கு ஆளுநருக்கு அண்ணாமலை நன்றி கூற வேண்டும்.

சர்ச்சை
ஆளுநரின் பேச்சால் அண்ணாமலை சர்ச்சைகளில் இருந்து தப்பி இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் கோபப்பட்டது, வீடியோ ஆடியோ விவகாரம் என்று பெரும் விமர்சன புயலில் சிக்கி இருந்த அண்ணாமலையை ஆளுநர் காப்பாற்றி விட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது. பாஜக, அதிமுக போன்ற திமுகவிற்கு எதிரான கட்சிகளுக்கு ஆளுநர் உதவி செய்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது. ஆளுநருக்கு தமிழ்நாடு பற்றி தெரியவில்லை. இந்த மாநிலத்தின் அரசியல், மக்களின் சமூக அமைப்பு, மாநிலத்தின் வரலாறு, இங்கே இருக்கும் அரசியல் கொள்கை என்ன என்று எதுவும் தெரியாமல் ஆளுநர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார், என்று மூத்த பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications