ஆளுநர் போட்ட கல்.. பாஜகவிற்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா? திமுகவிற்கு ப்ளஸ்! அட சீமான் வேற வந்துட்டாரே
சென்னை: ஆளுநர் பேசுவது பாஜகவிற்குத்தான் எதிராக திரும்பும், ஆளுநர் பேசுவது திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை, முற்போக்கு கட்சிகளை ஒன்றாக்கி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பி இருக்கும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தி உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ஆர். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது.

ஆளுநர் பேச்சு
இந்த நிலையில் ஆளுநரின் இந்த பேச்சுக்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் விமர்சனம் வைத்துள்ளார். இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது.

பேட்டி
ஆளுநரின் செயல்பாட்டை பார்க்கும் போது வரலாறு திரும்புகிறது என்றுதான் பார்க்கிறேன். ஆட்டிற்கு எதற்கு தாடி, நாட்டிற்கு எதற்கு ஆளுநர் என்றுதான் திமுக நிலைப்பாடு எடுத்துள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுகவால் சிறப்பாக செயல்படவில்லை. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. அவர்களுக்கு கோர்ட்டில் பிரச்னையை எதிர்கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. அண்ணாமலை இந்த கேப்பில் தன்னை எதிர்க்கட்சியாக காட்ட நினைத்தார். ஆனாலும் அவரால் செயல்படவில்லை. உட்கட்சி பிரச்சனையை சரி செய்யவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. எப்போ எந்த வீடியோ, ஆடியோ வரும் என்று தெரியாமல் அவர் இருக்கிறார். அதை சமாளிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

பாஜக பிரச்சனை
இந்த நேரத்தில் ஆளுநர் தன்னால் முடிந்த எதிர்ப்பை அரசுக்கு எதிராக பதிவு செய்ய பார்க்கிறார். யாராவது அரசை எதிர்க்க வேண்டும் என்று ஆர். என் ரவி இப்படி செய்கிறார். ஆளுநர் இப்படி கொள்கை ரீதியான முரணை வெளிப்படுத்த கூடாது. அண்ணாமலை, அமித் ஷா செய்யலாம். ஆனால் ஆளுநர் செய்ய கூடாது. இந்த சித்தாந்த மோதல் களத்திலும் இருக்கிறது. ஆளுநரின் இந்த பேச்சுக்களை பார்த்து மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் எதிர்ப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். தமிழ்நாடு என்பது ஒரு வார்த்தை அல்ல. அது உணர்ச்சி.

உணர்ச்சி
இந்த உணர்ச்சியில் ஆளுநர் கை வைத்து இருக்கிறார். ஆளுநர் பேசுவது பாஜகவிற்குத்தான் எதிராக திரும்பும். ஆளுநர் பேசுவது திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை, முற்போக்கு கட்சிகளை ஒன்றாக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் சீமான் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுகவை இத்தனை நாட்கள் விமர்சனம் செய்து வந்த சீமான் இப்போது அதே திமுகவின் பக்கம் சீமான் நிற்கிறார். அவர்கள் ஒன்று சேர்க்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.

திமுக
ஆளுநர் போடும் கல் எல்லாம் பாஜகவிற்கு எதிராகத்தான் திரும்பி இருக்கிறது. கல்லை தூக்கி கடலில் போட்டுவிட்டு மீன் பிடிக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரால் தமிழ்நாட்டில் மீன் பிடிக்க முடியாது. ஆளுநர் இருப்பார், போவார். ஆனால் பாஜகவிற்குத்தான் இதனால் சிக்கல். ஆளுநர்கள் எல்லாம் தனி நபர்கள் கிடையாது. ஒன்றிய அரசால் அரசியலமைப்பு பணிகளை செய்வதற்காக அவர் பணியமர்த்தப்பட்டு உள்ளார். ரவி போனாலும் நாளை அனுப்பும் நபர்களையும் இதேபோல்தான் ஆளுநர் அனுப்புவார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக நிர்பந்தத்தை திணிக்க அரசு முயன்று கொண்டு இருக்கிறது.

கூட்டணி
கூட்டணி கட்சியில் இருக்கும் புதுச்சேரி முதல்வரே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கை விரிக்கிறார். ரங்கசாமியே என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார். இங்கே திமுக ஆளுநரை மிக தீவிரமாக எதிர்க்கிறது. நாளை இன்னொருத்தர் வந்தாலும் இதே வேலையைத்தான் செய்ய சொல்வார்கள். பாஜகவின் நிர்ப்பத்ததின் பெயரில் அவர்கள் செய்கிறார்கள். இங்கே ஆளுநரின் அழுத்தம் அதிகம் இருக்க காரணம், தமிழ்நாட்டின் எதிர்ப்புதான். ஆர்எஸ்எஸ் திட்டங்களுக்கு தமிழ்நாடு சிம்ம சொப்பனமாக இருக்கிறது.பாஜகவிற்கு தமிழ்நாடு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. பாஜக தமிழ்நாட்டில் அதிகமாக வெறுக்கப்படும் கட்சியாக இருக்கிறது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அதிகமாக நேசிக்கப்படாத கட்சியாக பாஜக உள்ளது. நோட்டாவோடு போட்டியிடும் கட்சியாக பாஜக உள்ளது. பாஜக வளர்ந்ததாக சொல்வது எல்லாம் பொய். அதெல்லாம் வார் ரூம் வைத்துக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். காயத்ரி ரகுராமே அதை உடைத்து சொல்லிவிட்டார். தமிழ் என்றால் ஏற்றுக்கொள்ள கூடிய தமிழ்நாடு மக்களே காசி தமிழ் சங்கமத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே? தமிழ்நாடு மக்கள் இடையே ஏன் அது ஹிட் அடிக்கவில்லை? பிரதமர் மோடி கலந்து கொண்டும் கூட அது ஹிட் அடிக்கவில்லை. மக்களுக்கு எது மொழி, எது அரசியல் என்றெல்லாம் வித்தியாசம் தெரியும். இதைத்தான் பாஜக புரிந்துகொள்ளவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications