DMK Files: பற்ற வைத்த பழனிசாமி.. திமுக ஊழல் பைல்களுடன் டெல்லி சென்ற ஆளுநர் ரவி
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கிற அஜென்டாவுடன் டெல்லி பாஜக களமிறங்கியுள்ளது. திமுக ஊழல் குறித்து ஆளுநர் ரவியுடன் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் ரவி இன்று டெல்லி சென்றார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அகில இந்தியளவில் பாஜகவுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுப்பதால, திமுகவை வீழ்த்தியாக வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கண்காணித்து வருகிறார்.

திமுக மீது எடப்பாடி பழனிசாமி புகார்
சமீபத்தில் அமித்ஷா தமிழ்நாடு வந்திருந்தார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.
திமுக ஆட்சியில் உள்ள ஊழல் புகார்களை தூசி தட்டி, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் பாஜகவின் அஸைன்மென்டாக உள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்தார்.
ஆளுநர் டெல்லி பயணம்
அப்போது திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து அவர் ஆளுநரிடம் புகாரளித்தார். கடந்த 4 வருட திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர். இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களையும் தனி பைலாக எடப்பாடி வழங்கியிருந்தார்.
எடப்பாடியின் டெல்லி விசிட்டில் அமித்ஷாவிடம் இதைப்பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். திமுக குறித்து எடப்பாடி புகாரளித்த பைல்களுடன் அவர் டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர் பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications