இன்று முதல் 2 நாள்.. தென்காசி, விருதுநகரில் ஆளுநர் ஆர்என் ரவி சுற்றுப்பயணம்! ஏன் தெரியுமா? பின்னணி
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2 நாள் பயணமாக இன்று தென்மாவட்டங்களுக்கு விசிட் செய்கிறார். தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ள நிலையில் அதுபற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இவர் அவ்வப்போது தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அடிக்கடி இவரது பேச்சு என்பது விவாதத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் அவ்வப்போது ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கருத்து மோதல்களையும் ஏற்படுத்தும். இந்நிலையில் தான் இன்றும், நாளையும் ஆளுநர் ஆர்என் ரவி 2 நாள் பயணமாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திறங்க உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து காரில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சென்று விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பிறகு ஆழ்வார்குறிச்சியில் பாரம்பரியமாக பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று ஆசிரம குழந்தைகள் மற்றும் பணியாளர்களை சந்தித்து பேச உள்ளார். அதன்பிறகு இரவில் ஓய்வு எடுக்கும் ஆளுநர் ஆர்என் ரவி மறுநாள் காலையில் 2வது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அதன்படி நாளை கோவிந்தப்பேரி சென்று நெல்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவர் அரண்மனையை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து ஒண்டி வீரன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மேலும் சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையடுத்து விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் நாளை இரவு மதுரை சென்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications