ஆளுநர் திசைதிருப்புகிறார்.. ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளனும்- PFI குறித்த கருத்துக்கு SDPI கண்டனம்
சென்னை: பேரறிவாளன் வழக்கில் தன் மீது அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கும் உச்சநீதிமன்ற கருத்துக்களை மடைமாற்றும் முயற்சியாகவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்து இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஆபத்தானது என்றும், மனித உரிமைகள் என்ற முகமூடியை போட்டுக்கொண்டு இருப்பதாகவும் விமர்சித்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடும் கண்டனத்திற்குரியது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை பயங்கரவாத இயக்கம் போல சித்தரித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பாப்புலர் ஃப்ரண்ட் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிறுபான்மை சமூக மக்களுக்கும் மதச்சார்பற்ற அடிப்படையில் மக்கள் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய அமைப்பு.

மூன்றாம் தர நபர் போல் பேச்சு
காலத்தால் அவசியமான மாபெரும் மக்கள் சக்தியாக விளங்கும் பாப்புலர் ஃப்ரண்டை கொச்சைப்படுத்தும் நோக்கில் உரையாற்றி இருப்பது என்பது, அரசியலமைப்பு சட்டத்தின்படி பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஏதோ மூன்றாம் தர நபர் போல பொறுப்பற்ற வகையில் பேசுவது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வாகும். உடனடியாக தமிழக ஆளுநர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

மடைமாற்றும் முயற்சி
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட தமிழக அரசு இயற்றிய 19 மசோதாக்களை நிறுத்தி வைத்தும், பேரறிவாளன் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனது நடவடிக்கையின் மீது தொடர்ந்து அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கும் உச்சநீதிமன்ற கருத்துக்களை மடைமாற்றும் முயற்சியே ஆளுநரின் இன்றைய கருத்து. என்னதான் இதுபோல ஒன்றிய அரசு மற்றும் சங்பரிவார சக்திகளின் ஊதுகுழலாக சனாதன கருத்துக்களை விதைக்க முயற்சி செய்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் உடைய சேவையை ஒருபோதும் இந்த நாடு மறவாது.

ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்
கொரோனா பேரலை மட்டுமல்ல இந்த நாட்டை சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு வேட்டு வைக்க முயற்சிக்கும் பாசிச அபாயங்களில் இருந்தும் இந்த நாட்டு மக்களை விடுவிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் காலத்திற்கும் தேவையான பாப்புலர் ஃப்ரண்ட் என்ற சித்தாந்த இயக்கத்தை இதுபோன்ற அவதூறுகளால் வீழ்த்திவிட முடியாது என்பதை தமிழக மக்கள் ஆளுநருக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது. ஜனநாயக சக்திகள் இந்த சதியை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டும்." என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications