இது பட்டமளிப்பு விழா.. ஆளுநர் அரசியல் களமாக்குகிறார் - பல்கலைக்கழகமே பொறுப்பு - உயர்கல்வித்துறை
சென்னை: பட்டமளிப்பு விழா மேடையை அரசியல் களமாக ஆளுநர் அலுவலகம் மாற்றுவதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்படுவதாக பட்டமளிப்பு விழா அழைப்பதில் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், அதனை புறக்கணிக்கப்போவதாகவும் கூறினார்.

அலோசிக்காமல் முடிவு
பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது தான் நடைமுறை என்று கூறிய அவர், "அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள் விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவது தவறானது. இணை வேந்தரான தன்னை கேட்காமலேயே பட்டமளிப்பு விழாவில் யாரை பேச அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்.முருகனை அழைத்தது ஏன்?
பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினர் என யாரையும் அழைக்கும் வழக்கம் கிடையாது. பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வேந்தருக்கு முன் பேச வேண்டியது இணை வேந்தர்தான். பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களிடையே அரசியலை புகுத்துவதாக ஆளுநர் மீது சந்தேகம் உள்ளது. பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனை கவுரவ விருந்தினராக அழைப்பதன் நோக்கம் என்ன?

பாஜகவுக்கு பிரச்சாரமா?
மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை. பாஜகவுக்கு பிரச்சாரம் செய்பவர் போல் ஆளுநர் இருக்கிறார். வரலாற்றை ஆளுநர் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும் மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை
இந்த நிலையில், பட்டமளிப்பு விழா சர்ச்சை தொடர்பாக ஆளுநர் அலுவலகம் மீது தமிழ்நாடு உயர்கல்வித்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆளுநர் அலுவலகம் மரபை மீறி இருப்பதாகவும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பு என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பட்டமளிப்பு விழா மேடையை அரசியல் களமாக ஆளுநர் அலுவலகம் மாற்றுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications