‛‛திருக்குறள் ஆன்மிக சித்தாந்த நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது’’.. திருவள்ளுவர் திருநாளில் ஆளுநர் உரை
சென்னை: திருக்குறள் என்பது ஆன்மிக சித்தாந்த நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்என் ரவி கூறினார். சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி இவ்வாறு கூறினார்.
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வைகாசி அனுஷம் மற்றும் திருவள்ளுவர் திருநாளான இன்று ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் ஆளுநர் ஆர்என் ரவி இன்று வழிபாடு செய்தார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி திருவள்ளுவர் போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது: தமிழ்நாட்டு ஆளுநராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பரந்த மற்றும் மகத்தான ஆழமான விஷயங்கள் குறித்து ஆச்சரியம் அடைந்தேன். திருவள்ளுவர் வாழ்க்கை பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். திருக்குறள் மிகவும் விரிவான தொகுப்பு மற்றும் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு வாழ்க்கை முழுமைபெறுவது போல ஒரு ஒருங்கிணைந்த வாழ்வின் மிகப்பெரிய விரிவாக்கத்தைக் கொண்டது.
திருக்குறளின் பல வகை மொழிபெயர்ப்புகளையும் கருத்துரைகளையும் படித்துள்ளேன். அவை பெரும்பாலும் அறிவார்ந்த மற்றும் ஆன்மிக சித்தாந்த நோக்கத்துடனும் எழுதப்பட்டவை. ஒரு சாதாரண மனித மனதால் திருவள்ளுவரையும் அவரது போதனைகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவர் மிகப்பெரியவர்.
நன்னடத்தை பற்றிய அவரது விளக்கம், ஆதிபகவான் மீதான முழு பக்தி, இணக்கமான குடும்பம் மற்றும் சமூகத்தை வலியுறுத்துவது, ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கிய விரிவான பரிந்துரைகள், துறவிகளுக்கு வழங்கிய கடுமையான அறிவுரைகள், விவசாயிகளைப் போற்றியும், சிறிய மற்றும் பெரிய என அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த போதித்து, உண்மையை தேடும் அவரது வேட்கை, ஐம்புலன்களை அடக்கி உடலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறியும் ஆற்றல் மற்றும் அவரது பிற போதனைகள், ஒருவரால் எப்படி இவ்வாறு சிந்திக்க முடியும் என்றும் தனது எண்ணத்தில் தோன்றிய சிந்தனைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறள் வடிவில் சாத்தியமாக்கியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
அனைத்தையும் அழகாக இயற்றப்பட்ட குறையற்ற குறள்கள் வடிவில் கொண்டு வந்த திருவள்ளுவரின் உயர்ந்த மனிதப் பண்பு மற்றும் நிலைப்புத்தன்மை, தமிழ் மொழி மீதான அவரது அசாதாரண ஆற்றலை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றன. திருவள்ளுவர் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து, தொன்மையான, வளமான தமிழ் மொழியைப் பேசியும், எழுதியும் இருக்கிறார் என்பது நமக்குப் பெருமை.
திருவள்ளுவர் மனித குலத்துக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற தெய்வீகப் பரிசு. நாம் அனைவரும் அவரையும் அவரது மரபையும் போற்றுவோம். அதுவே திருவள்ளுவருக்கு நாம் செலுத்தக் கூடிய மிகவும் பொருத்தமான மரியாதையாக இருக்கும். அவரது போதனைகளின்படி வாழ முயற்சிப்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications