சட்டசபையில் பரபரத்த ஆளுநர் உரை.. பாதியில் வெளியேறிய ஆர்என் ரவி.. மரபு-உண்மை நிலை என்ன? முழுவிபரம்
சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி அரசின் சார்பில் அச்சிட்டு வழங்கப்பட்ட உரையின் சில விஷயங்களை படிக்காமல் தவிர்த்தற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே ஆளுநர் படிக்காமல் தவிர்த்தது பற்றி ஆளுநர் மாளிகை தரப்பில், ‛‛அரசாங்கத்தை புகழ்ந்த வார்த்தைகளையே தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், அது விதிமீறல் இல்லை'' என கூறப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் உரை என்றால் என்ன? பின்பற்றப்படும் நடைமுறை என்ன? நேற்று என்ன நடந்தது ? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:
தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் நேற்று சட்டசபையில் நடந்த விவகாரம் இருதரப்புக்கு இடையேயான பிரச்சனையை இன்னும் பெரிதாக மாற்றி உள்ளது.
2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் நேற்று ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் உரையாற்றினர்.

பாதியில் வெளியேறிய ஆளுநர்
அப்போது ஆளுநர் ரவி, தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை விட்டுவிட்டு படித்ததாகவும், உரையில் இல்லாத சில விஷயங்களை சுயமாக சேர்த்து படித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சட்டசபையில் ஆளுநர் ஆர்என் ரவி இருக்கும்போதே முதல்வர் ஸ்டாலின்‛‛ ஆளுநர் ஆர்என் ரவிக்கு வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை மட்டும் அவைகுறிப்பில் இடம்பெற செய்ய வேண்டும். அவர் கூறிய பிற விஷயங்களை இடம்பெற செய்யக்கூடாது'' என தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஆளுநர் மாளிகை விளக்கம்
இது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதில், ‛‛ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது சபை மரபை மீறிய செயல். ஆளுநர் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்குவது என்பது தீவிர விவாத பொருள். மரபு மீறி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிக்கு பொருந்தாது. அதிக முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட பிழை. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் தவிர்க்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பற்றி செய்திகள் தினமும் பத்திரிகைகளில் வருகிறது. அதன்படி தமிழ்நாடு அமைதியின் சொர்க்கம் என்பது எதார்த்தமானது அல்ல.

புகழும் வரிகளை பேசமாட்டேன்
தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டது மாநில மாநிலத்தின் முயற்சியால் மட்டுமே நடந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. உரையில் திருத்தம் செய்ய கூறிய போது அச்சுக்கு சென்று விட்டதால் பேசும் போது மாற்றிக் கொள்ளலாம் என அரசு தரப்பு தெரிவித்தது. ஆளுநர் உரையை நீக்குவதாக கூறிவிட்டு அவ்வையார், பாரதியாரின் வரிகளை நீக்கியுள்ளனர். வீரம் மற்றும் விரீயம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி என்பதை ஆளுநர் கூற முடியாது. எதார்த்தத்தை மீறிய அரசை புகழும் வரிகளை பேச மாட்டேன் என ஆளுநர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். ஆளுநர் உரைக்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிட்ட போது சபாநாயகர் அதை தடுக்காதது மரபு மீறிய செயல் என நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

தலைமை செயலக வட்டார தகவல்
இந்நிலையில் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இதுபற்றி தலைமை செயலக வட்டார தகவல்கள் கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் உரை என்பது ஆர்டிகிள் 176ன் கீழ் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தில் நிகழ்த்தப்படும் ஒன்றாகும். இந்த உரை மாநில அரசின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துரைக்கும் ஒரு உரையாம். இந்த உரை மீது ஆளுநர் உரைக்கு பின் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசின் கருத்துகள் மீது தீவிர விவாதங்கள் நடைபெறும். அனைத்து கட்சி தரப்பினரும், ஆளுநர் உரையின் மீது தங்களது கருத்துகளை தெரிவித்து விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி தலைவரும் அவரது உரையை இக்கூட்டத்தில் நிகழ்த்துவார். அதன்றபிறகு முதலமைச்சர் அவரது பதிலுரையை நிகழ்த்துவார்.

மரபு இதுதான்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு தயாரிக்கும் இந்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பதே மரபு. இந்த உரையில் ஆளுநரின் தனிப்பட்ட கருத்துகளுக்கோ, ஆட்சேபணைகளுக்கோ எவ்வித இடமும் இல்லை. மேலும் இவ்வுரை அவரது தனிப்பட்ட உரையுமல்ல. அரசின் உரையேயாகும். இந்த நடைமுறையை தொடர்ந்து பல ஆளுநர்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் கடைபிடித்து வந்துள்ளனர்.

சரியல்ல.. சரியன்று
‛‛வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்...'' என்கிற அவ்வையாரின் வரிகளையும், பாரதியாரின் ‛‛வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு'' என்கிற வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த ஆளுநர் உரையில் ‛‛வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்.. ''என்கிற வரிகள் சேர்க்கப்படவில்லை, அவற்றை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்தவிதமான கோரிக்கைளும் பெறப்படவில்லை. ஆதலால் இவை நீக்கப்பட்டுள்ளன என்று கூறுவது சரியல்ல. ‛‛வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு'' என்கிற பாரதியாரின் கவிதை வரிகளை பொருத்தவரை அரசு தயாரித்த உரையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆதலால் இவை நீக்கப்பட்ள்ளது என்று சொல்வது சரியன்று.

தரவு அடிப்படையில் உண்மை
ஆளுநர் தெரிவித்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் அச்சிடப்பட்ட உரையின் பத்தி 1 மற்றும் பத்தி 67 ல் இடம்பெற்றிருந்தன. எனவே அவை நீக்கப்பட்டன என கூறுவது சரியன்று. மேலும் ஆளுநர், அரசு தயாரித்த ஆளுநர் உரையில் ஆட்சேபணைக்குரிய பகுதிகளும், அரசு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பகுதிகளும் இருப்பதால், சில பத்திகளை வாசிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பத்தி 2ல் அண்மையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சி குறியீட்டு அறிக்கையில் 63.3 புள்ளிகளை பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தி 35ல் 28,232 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ஒரு தரவின் அடிப்படையிலான உண்மை தகவலாகும். இது எந்த பிற மாநிலங்களையும் ஒப்பிட்டு குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான உண்மை நிகழ்வுகளையும் ஆளுநர் தனது உரையில் வாசிக்கவில்லை.

ஆளுநர் ஒப்புதல் அளித்தது எப்போது?
மேலும் வரைவு ஆளுநர் உரை அவரது ஒப்புதலுக்காக ஜனவரி 6ம் தேதி காலை சுமார் 11.30 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் ஆளுநர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் சிறிய எழுத்து பிழை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 6 மாலை சுமார் 4.30 மணிக்கு மீண்டும் திரும்ப அனுப்பப்பட்டது. இதன்பின், ஆளுநர் அலுவலகத்திலு் இருந்து சில திருத்தங்களை மேற்கொள்ளுமமாறு கூறினர். ஆளுநர் அலுவலகத்துடன் கலந்தாலோசித்து அத்திருத்தங்களை மேற்கொண்டு இறுதியாக ஒரு உரை ஜனவரி 7 ம் தேதி இரவு 8 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி 8 காலை 11.30 மணியளவில் ஆளுநர் ஒப்புதலுடன் கோப்பு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

உண்மை நிலை இதுதான்
ஆளுநர் சில பத்திகளை நீக்கக்கோரியபோது, உரை அச்சிற்கு சென்றுவிட்டது என்று கூறியதும், எனவே தாங்கள் உரையை வாசிக்கும்போது அவற்றை தவிர்த்து வாசியுங்கள் என்ற வதந்தி தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையாற்றிய நாளின் அதிகாலையிலேயே உரை அச்சிற்கு அனுப்பப்படும். இதுதான் கடைப்பிடிக்கப்படும் மரபு. இவ்வாண்டும் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது. ஜனவரி 8 ம் தேதி காலை 11.30 மணிளவில் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட கோப்பு பெறப்பட்டது. ஆனால் அரசின் சார்பில் ஆளுநர் உரை 9 ம் தேதி அதிகாலை சுமார் 12.30 மணியளவில் அச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. எனவே உண்மை நிலை இவ்வாறிருக்கும் நிலையில் தவறான தகவல்களையும், வதந்திகளையும் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களில் பரப்புவது சரியானதல்ல என தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications