பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1.41 லட்சம் புதிய வீடுகள் – ரூ.2.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
சென்னை: வாடகை வீட்டுக்காரர்கள், சொந்த வீட்டை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்ற விருப்பம் உள்ளோருக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டம்தான், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். சொந்த வீடு கட்டிக்கொள்ள, பணமில்லாதவர்களுக்கு, நிதியுதவி வழங்கி கை தூக்கி விடுகிறது மத்திய அரசு.. அனைவருக்கும் வீடு என்ற ஒற்றை இலக்குடன் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கிய நிலையில், தற்போது இதுகுறித்த குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.
PMAY அதாவது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்பது, நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கு, மாநில அரசுடன் சேர்ந்து, வீடுகளை கட்டி தருவதாகும்.

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம்
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ், நிலமுள்ளோருக்கு வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கி கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது போன்றவைகளை நடைமுறைப்படுத்துகிறது
இத்திட்டத்தின்கீழ் இதுவரை கிட்டத்தட்ட 2.81 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 29.07.2025 நிலவரப்படி, 4.12 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்கை (கட்டம் I + கட்டம் II) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. அதன்படி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 3.84 கோடி பயனாளிகளுக்கு அனுமதியும் தரப்பட்டுள்ளது.
நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டம்
மத்திய அரசின் இந்த திட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வீடு கட்ட தலா ரூ.2.5 லட்சம் நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டது.. பிறகு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது..
இதனை தவிர, 'அங்கிகார் 2025' பிரச்சாரமும் துவங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்காகவே, அங்கிகார் 2025 என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0ன் கீழ், மேலும் 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கடந்த 15ம் தேதி, செயலாளர் ஸ்ரீனிவாஸ் கதிகிதலா தலைமையில் நடைபெற்றது.
புதிதாக 1,40,942 வீடுகள் கட்ட அனுமதி
அப்போது பேசிய அவர், "புதிதாக 1,40,942 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது. அனைவருக்குமான திட்டம் இது என்பது இதன்மூலம் மீண்டுமொருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசாம், ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, ராஜஸ்தான், தமி்ழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஹரியானா, ஒடிசா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.5 லட்சம் நிதியுதவி
இந்த வீடுகள் கட்டப்படும்போது அந்தந்த பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை யூனியன் பிரதேச அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். பயனாளிகளின் எளிதான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக போதிய உள்கட்டமைப்பு, சாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து வசதிகள் உறுதி செய்யப்பட்ட பிறகே இந்த திட்டங்கள் இறுதி செய்யப்பட வேண்டும்.
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0ன் கீழ் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு 1 கோடி குடும்பத்தினருக்கு ரூ. 2.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என்றார் செயலாளர் ஸ்ரீனிவாஸ் கதிகிதலா.












Click it and Unblock the Notifications