அமைச்சரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை: தேனிக்கு பணியிட மாற்றம்.. மகிழ்ச்சியில் ஓட்டுனர்
சென்னை: அமைச்சர் சிவசங்கரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் கண்ணனுக்கு அவர் விரும்பியபடியே தேனிக்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. கோரிக்கை வைத்த மறுநாளே ஏற்கப்பட்டு சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளதால் ஓட்டுநர் கண்ணனும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். விழாவில் போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக் கொண்டு இருந்தார். அப்போது, அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர் தனது 6 மாத கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்தார். அதோடு குழந்தையை அமைச்சரின் காலில் வைத்து உருக்கமாக கோரிக்கை வைத்தார்.

ஓட்டுநர் கண்ணனின் இந்த செயலால் விழா மேடையியில் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றியிருந்த அதிகாரிகளும் சற்று பதற்றம் அடைந்து உடனே குழந்தையை தூக்கினர். அப்போது, அமைச்சரிடம் உருக்கமாக கோரிக்கை வைத்த ஓட்டுநர் கண்னன், பின்னர் இது பற்றி கூறியதாவது:- எனது சொந்த ஊர் தேனி ஆகும். 5 வயதில் ஒரு மகளும் 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக எனது மனைவி தவறிவிட்டார். இதனால், எனது இரண்டு குழந்தைகளையும் வயதான பெற்றோர்கள் பராமரித்து வருகிறார்கள். என்னால் , கோவையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வருவதில் கடும் சிரமம் உள்ளது. இதனால், எனக்கு தேனிக்கு பணி மாறுதல் வேண்டும் என்றுகோரிக்கை வைத்தேன்.

போக்குவரத்து மேலாளரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அமைச்சரிடமே நேரில் கோரிக்கை வைத்தேன்" என்றார். இந்த நிலையில், அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மறுநாளே, ஓட்டுநர் தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோரிக்கை வைத்த மறுநாளே ஏற்கபட்டு சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளதால் ஓட்டுநர் கண்ணனும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
முதல்வரின் உத்தரவுப்படி இந்த பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உத்தரவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் கண்ணன் தனது பணியிட மாறுதல் உத்தரவை கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications